கொழும்பு உள்ளிட்ட 100 பிரதேசங்களில் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்
புதிய இணைப்பு
தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு உள்ளிட்ட சுமார் 100 பிரதேசங்களில் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று (30) மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனத்திற்கு ஏற்பட்டது.

செயலிழக்கச் செய்தல்
வெசாக் பௌர்ணமி மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக மின்சாரத்திற்கான தேவை குறைந்தமையால், மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையே இந்த மின் விநியோகத் தடையிற்குக் காரணமாக அமைந்தது.
இதேவேளை மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, நாளையும் (31) கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய பலகங்களை செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம், சூரிய பலகங்களின் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாளைய தினத்திலும் மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சுயமாக சூரிய பலகங்ககளை செயலிழக்கச் செய்து, கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சமநிலையின்மை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சில மணிநேரங்களுக்குள் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினத்தில் (30) நிலவும் மின்சாரத்திற்கான குறைந்த தேவையே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை
எனினும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை மின்சாரத் தேவை குறைந்துள்ள நிலையில் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய பலகங்களை இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்நிறுவனமும் சூரிய பலகங்களின் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |