சொகுசு வாகனத்தை ஒப்படைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe) பயன்படுத்திய கறுப்பு நிற வி 8 ரக சொகுசு வாகனத்தைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்று நீதிமன்றத்திடம் கையளிக்குமாறு கொழும்பு (Colombo) - கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் தாக்கல் செய்த மனு மீதான ஆராய்வின் போதே நேற்றையதினம் (11.11.2024) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சொகுசு ரக வாகனத்தை மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு நீதவான் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
மேலதிக விசாரணை
இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக தனது வாகனத்தை உயர்நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அரச ஊழல் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளதால் வாகனத்தை ஒப்படைக்குமாறு தம்மிடம் கோரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
இந்தநிலையில், டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து வாகனம் தொடர்பான அறிக்கை தேவை என நீதிமன்றில் அரச ஊழல் தடுப்புப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, தாம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டியிருந்தது என்று சேனசிங்க தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த வாரமே, அரச பகுப்பாய்வு ஆய்வாளர் தமது வாகனத்தை தவறானது அல்ல என்று அங்கீகரித்திருந்தார்.
இருப்பினும், அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்த விரும்புகிறார்கள் என்று சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |