கைது வேட்டை தொடர்ந்தால் .. அரசுக்கு சுமந்திரன் கடும் எச்சரிக்கை
கைது செய்யும் படலம் தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்
போராட்டத்தின் செய்றபாட்டாளர்களை தொடர்ந்தும் கைது செய்யும் படலம் தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று(4) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

புதிய அரசு மக்கள் மீது அடக்குமுறை
“புதிய அரசு மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எழுச்சிப் போராட்டங்களால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களினாலேயே இந்த அரசு ஆட்சியைக் கைப்பற்றியது. போராட்டக்காரர்களின் முதுகில் ஏறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள், தற்போது அந்தப் போராட்டக்காரர்களையே வேட்டையாடத் தொடங்கியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரையில், ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வன்முறையற்றவையாகவும், அமைதியானவையாகவும் காணப்பட்டன என்று சான்றிதழ் வழங்கியிருந்தார்.
ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தலைமை தாங்கியவர்களைத் தற்போது அரசு கைதுசெய்து வருகின்றது.

ஜோசப் ஸ்டாலின் பிரபல தொழிற்சங்கவாதி
நேற்றுக் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிரபல தொழிற்சங்கவாதியாவார். அவரைக் கைதுசெய்ததை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். போராடும் உரிமையை எவரும் தடுக்க முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.