அம்பாறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே போகிறது!
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே போகிறது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கட்சி முக்கியஸ்தர்களுடன் காரைதீவு பிரதேசத்தில் நூலக வளாகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே போகிறது. கொரோனாவை காரணம் காட்டி மே்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் மற்றது காலாகாலமாக மாற்று சமூகத்தினர் செய்கின்ற அடாவடிகள் என்பன வீரியம் பெறுகின்றன.
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முக தோற்றத்தை வைத்துக் கொண்டு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கம் செய்ய வேண்டிய பல விடயங்களை தடுத்து வருகின்றனர். இங்கிருந்து அவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி உங்களுடைய சொந்த நன்மைக்காக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களது இருப்பை கேள்விக்குறியாக வேண்டாம்.
நாங்கள் நீதி , நியாயத்தை தூய மனதோடு செய்பவர்கள் . எந்த சமூகத்திற்கும் தீங்கு வரக்கூடாது என்று மிக தெளிவோடு எமது கருத்துகளை முன்வைக்கின்றோம் . முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத்திற்கு எதிராக முஸ்லிம் தலைவர்களை விட நாம் குரல் கொடுத்தோம்.
ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற பலவித இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக சரியாக நியாயமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை என்று ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. இதனை சீர்செய்ய வேண்டிய கடப்பாடு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது.
முஸ்லிம் மக்கள் இந்த விடயம் தொடர்பாக கவனிக்கப்பட வேண்டியது நியாயத்திற்காக பேசுகின்றவர்கள் யார் என்பதனை கண்டறிய வேண்டும். தங்களது சொந்த நன்மைக்காகவும் , வியாபாரத்திற்காகவும் செயற்படுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் . இனவாத அடிப்படையில் அல்லாமல் நீதி நியாயத்திற்காக முன்னிற்கின்றவர்களை ஆதரிக்க வேண்டும்.
நாங்கள் எந்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் அல்ல நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்கள் தமிழ் சமூகத்திற்கு எதிரான அநீதிகளை தட்டி கேட்கின்ற பிரதான பொறுப்பு எங்கள் தோள்களில் இருக்கின்றது.
அதனை செய்வோம். பாதிக்கப்பட்ட எந்த சமூகத்திற்கும் நாம் குரல் கொடுத்ததை அண்மை காலத்தில் பலர் கண்டுள்ளனர். சிலர் நன்மை பெற்றுள்ளனர். இனவாதத்தின் பெயரால் தமிழ் சமூகத்திற்கு தீமை செய்ய வேண்டாம் என அம்பாறை மாவட்டத்திலிருக்கும் ஏனைய சமூகத்திற்கு விடுக்கும் வேண்டுகோள் இது என தெரிவித்தார்.