சுமந்திரனின் கோரிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு
இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், இந்த கருத்தை அவர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டும் தமிழக அரசு உதவிகளை வழங்கினால் பிளவு ஏற்படும் என்றும் இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவ வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான போராட்டங்கள் இலங்கை முழுவதும் நடைபெற்று வருகின்றன. அனைத்து மக்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் போராட்டக் களத்தில் அங்கங்கே இன வேறுபாடின்றி மக்கள் ஒன்றாகத் திரண்டு தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
இதனிடையே இலங்கை அரசுக்கு பல்வேறு நாடுகளும் உதவிகளைச் செய்து வருகின்றன. இந்திய அரசும் பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே இருக்கும் இனப்பாகுபாடு காரணமாக இந்த நிவாரணம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமமாக சென்று சேர வாய்ப்பில்லை.
இதனால் தமிழர்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதை உணர்ந்துதான் தமிழ் மக்களுக்கு நேரடியாக உதவிகளைச் செய்வதற்கு இந்திய அரசின் அனுமதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் கோரியிருந்தார். அதற்கு இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமந்திரன் ஊடகங்களில் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், “ பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்க முன்வந்த தமிழக முதலமைச்சர் எம் கே ஸ்டாலினுக்கு முதலில் நன்றி கூறுகின்றோம். ஆனால் தற்போது இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
அது மாத்திரமின்றி சிங்கள மக்கள் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரும் நிலை உருவாகி இருப்பதுடன் அனைவரும் ஒன்றிணைந்து தமது உரிமைகளுக்காகப் போராடுகின்றார்கள். எனவே, ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகி வரும் போது தமிழ் மக்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்குவது இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்திவிடும்.
ஆகவே, நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவிகளை வழங்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார் (தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ.கணேசனும் இதே கருத்தை ட்விட்டர் மூலமாகப் பகிர்ந்திருக்கிறார்.)
இந்தக் கருத்துக்கள் அவர்களது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகின்றனவா அல்லது அவர்களுக்கு சிங்கள அரசியல் கட்சிகள் மூலமாகத் தரப்பட்டிருக்கும் அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
இலங்கை அரசு ஒரு பேரினவாத அரசு என்பதையோ, அந்தத் தன்மை இந்த நெருக்கடி காலத்திலும் மாறிவிடவில்லை என்பதையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மறுக்கமாட்டார்கள். இலங்கை அரசின் இனவாதத் தன்மை கட்டமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
எனவே அரசின் திட்டங்கள், நிவாரண உதவிகள் எதுவாக இருந்தாலும் அந்த கட்டமைப்பின் ஊடாகத்தான் செயல்படுத்தப்படும். எனவே தமிழ் மக்கள் அதில் புறக்கணிக்கப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இதனைப் புரிந்துகொண்டிருப்பதால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஈழத்தமிழ் மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இது ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே ஆகும்.
தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்திருக்கும் கருத்து இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் காரணமாக இன வேற்றுமைகள் மறைந்து மக்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட்டு விட்டது போலவும், அதன் காரணமாக இலங்கை அரசும் தனது தன்மையை மாற்றிக் கொண்டு விட்டது போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முன் முயற்சியைத் தடுப்பதாகவும் இருக்கிறது.
பேரினவாதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் சிங்கள மக்களின் வெறுப்பைக் குறைக்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலில் போராட்ட களத்தில் தமிழர்களும் சிங்கள மக்களோடு ஒன்றிணைந்து நிற்கவேண்டும். ஆனால் அதே நேரத்தில் தமது உரிமைகளை அவர்கள் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது. தமிழ்நாடு அரசின் வழியாக இந்திய அரசை வலியுறுத்தி அதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்குக் கொடுக்கவேண்டும். அதற்கு உகந்த தருணம் இது.
வடக்கு மாகாண கவுன்சிலும் இலங்கை அரசால் முடக்கப்பட்டுள்ள நிலையில் இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுரிமையாக இருக்கவேண்டும். இந்த உண்மைகள் தெரிந்திருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படி கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது, தமிழ்நாடு அரசு இனி ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிட்டு எந்த கருத்தையும் சொல்ல இடமில்லாமல் ஆக்குவதோடு தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கை மக்களிடையே பிளவை உண்டாக்குகிறார் என்ற அவதூறுக்கும் வழிகோலுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.
