விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்
விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்கி குறைந்த செலவில் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வழியமைப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நிந்தவூரில் (Nintavur) நேற்று (14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் மக்கள் வெற்றி பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”நாம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகள் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம்.
நவீன தொழில்நுட்ப அறிவு
சர்வதேச தரத்திலான இளைஞர் மத்திய நிலையங்களை உருவாக்கி, அதனூடாக இளம் தலைமுறையினருக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழிக்கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு என்பவற்றை பெற்றுக்கொண்டு, சிறந்த தேர்ச்சியையும் ஆளுமையையும் விருத்தி செய்து கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவோம்.
விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராம் உரமூடை ஒன்றை வழங்கி, குறைந்த தொகையில், குறைந்த செலவில் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வழியமைப்போம். இதற்கு மேலதிகமாக கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தையும் வழங்குவோம்.
வறுமை அதிகரித்து காணப்படுகின்றமையால் நாட்டு மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். எனவே வறுமையை ஒழிப்பதற்காக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |