இராஜாங்க அமைச்சரின் ஆதரவாளர் வீட்டில் விறகு குவியலில் மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வாள்
புத்தளம் மாவட்டத்தில் உள்ள பலமிக்க இராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஆதரவாளரின் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி ,வாள்கள் மற்றும் பல பொருட்களுடன் பிரதான சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (03) காலை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் புத்தளம் - குருநாகல் வீதியில் கலடிய பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய திருமணமானவர். சந்தேக நபர் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும், பலம் வாய்ந்த இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தீவிர ஆதரவாளர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புத்தளம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இன்று (03) நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டை சுற்றிவளைத்ததில் ரி-56 துப்பாக்கி, மகசீன், இரண்டு கைத்துப்பாக்கி உறைகள், பொம்மை கைத்துப்பாக்கி மற்றும் 4 அடி நீள வாள் என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவருக்கும் சந்தேகம் வராத வகையில் விறகு குவியலில் துப்பாக்கிகள் மற்றும் வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சோதனையை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
புத்தளம் காவல்துறை அதிகாரி ஜெயமஹா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், புத்தளம் உதவி காவல் அத்தியட்சகர் (ஏஎஸ்பி) பி.டி.அமரபந்து, மகளிர் பிரிவு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, தலைமைப் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.சந்திரசிறி லால், இன்ஸ்பெக்டர் எச்.ஏ. பத்திரன மற்றும் பல அதிகாரிகள் சோதனையில் இணைந்திருந்தனர்.
