சுரேஷ் சலே விவகாரத்தில் ஒரு நற்செய்தி! சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டு
அரச புலனாய்வுச்சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே முன்பை விட மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு எந்த நோயும் இல்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்டு தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலேவுக்கு எதிரான வழக்கு நேற்றைய தினம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரான சுரேஷ சலே நிகழ்நிலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
எந்த நோயும் இல்லை
தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததோடு, மேலதிக அறிக்கை ஒன்றையும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து விடயங்களை முன்வைத்திருந்தார்.

''முதலில் ஒரு நல்ல செய்தியுடன் எனது தரப்பு சாட்ச்சியங்களை முன்வைக்கின்றேன்.
120 நாட்களுக்கும் அதிக காலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கிற்கு நேரடியாக சென்று சாட்சியமளித்தார்.
அங்கு அவர் நீண்ட சாட்சியம் ஒன்றை வழங்கியிருந்தார். இப்போது அவர் முன்பை விட மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு எந்த நோயும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |