காவல் நிலையத்திலிருந்து தப்பித்த முக்கிய சந்தேக நபர் - யாழில் சம்பவம்
யாழ் - வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று முற்பகல் பருத்தித்துறை காவல் நிலைய காவலில் இருந்து தப்பித்துள்ளார்.
பருத்தித்துறை காவல்துறை புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது, நேற்று அல்வாய் பகுதியில் வைத்து 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரின் உடமையிலிருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
தப்பித்த சந்தேக நபர்
சந்தேக நபரை இன்று நண்பகல் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவிருந்த நிலையில், அவர் இன்று முற்பகல் பருத்தித்துறை காவல் நிலையத்திலிருந்து தப்பித்துள்ளார்.
மலசல கூடத்தின் யன்னல் இடைவெளி ஊடாக அவர் வெளியேறி தப்பித்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)