சுமணரத்னதேரர்மீது துப்பாக்கிசூடு - சந்தேக நபர் சிக்கினார்
மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராம விகாரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர்
சந்தேகநபர் நேற்று முன்தினம் (பெப்ரவரி 14) கைது செய்யப்பட்டதாகவும், அவர் ரஜகலதென்ன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தல்துவ தெரிவித்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேக நபர்கள் இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
காலைவேளை நடந்த துப்பாக்கிசூடு
மட்டக்களப்பில் ஸ்ரீ மங்களாராம விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய அம்பிட்டியே சுமணரத்ன தேரர் பணிபுரியும் ஆலயத்தின் மீது பெப்ரவரி 13ஆம் திகதி காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், துப்பாக்கிச் சூட்டு தாக்குதலினால் சுமணரத்ன தேரருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
