பாகிஸ்தான் கொடூர கொலை- கைதாவோர் அடையாளம் தெரியாத இடத்தில் தடுத்து வைப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியால்கோட்டில் இலங்கையைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை முகாமையாளரான பிரியந்த கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 345 தொழிலாளர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின் போது பாதுகாப்பு கமராக்கள் மற்றும் மொபைல் போன்களில் இருந்த காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் அடையாளம் தெரியாத இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சம்பவத்துடன் நேரடித் தொடர்புள்ள தொழிற்சாலையின் தொழிலாளர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் மற்ற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சியால்கோட்டைத் தவிர, குஜராத், நரோவால், லோதர்ன், ரஹீம் யார் கான் மற்றும் குஜ்ரன்வாலா ஆகிய இடங்களிலும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சியால்கோட்டில் உள்ள ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆடைத் தொழிற்சாலைக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.