இலங்கையர்களை நாடுகடத்தும் சுவிசின் நடவடிக்கை - உடன் முடிவுகட்ட கோரிக்கை
இலங்கையர்களை சுவிசின் நாடுகடத்தும் நடவடிக்கை
மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இலங்கையர்களான புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு சுவிட்சர்லாந்து உடனடியாக முடிவுகட்டவேண்டும் என சித்திரவதைக்கெதிரான உலக அமைப்பு (OMCT) கோரியுள்ளது.
இது தொடர்பில் சுவிஸ் பெடரல் கவுன்சிலருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் தற்போது நிலவும் சூழல் பயங்கரமானது, பொருளாதார நெருக்கடிகள் வன்முறைக்கு வழிவகுத்துள்ள நிலையில், அங்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட நிச்சயமில்லை.
திருப்பி அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்
இப்படிப்பட்ட ஒரு சூழலில், புகலிடக் கோரிக்கையாளர்களையும், புலம்பெயர்ந்தோரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்.
அவர்களில் சிலருக்கு இன்னமும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அப்படி அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது, சுவிட்சர்லாந்தை அதன் சர்வதேச சட்ட ரீதியான பொறுப்புக்களை மீறவைப்பதாக அமையும்.
சித்திரவதையால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் பலருக்கு இப்போது சுவிட்சர்லாந்தில் போதுமான சிகிச்சை கிடைத்து வருகிறது. அவர்களில், பாலியல் வன்புணர்வு முதலான பல்வேறு கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளான இலங்கைத் தமிழர்களும் அடங்குவர்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவர்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்புவது அவர்களுக்கு மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ புனர்வாழ்வு சேவைகள் கிடைப்பதற்கும் தடையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.