யாழ். திருநெல்வேலியில் வாள் வெட்டு தாக்குதல் : ஒருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தைப் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருநெல்வேலி சந்தையில் கூலி தொழில்புரியும், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இருவர் மதுபோதையில் தர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் மற்றையவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
அதனையடுத்து அங்கிருந்தவர்கள் தாக்குதலாளியை மடக்கி பிடித்ததுடன், தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினரிடம் தாக்குதலாளியை ஒப்படைத்தனர்.

தாக்குதலாளியை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை திருநெல்வேலி சந்தைப் பகுதியில், சந்தை முடிவடைந்த பின்னர், சந்தையில் கூலி தொழில் செய்வோர் போதையில் அட்டகாசம் புரிவதாகவும், அதனால் சந்தை கட்டட தொகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் இது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் அவதானம் செலுத்தி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |