நாட்டின் பொறுப்பை ஒப்படைத்தால்..! வளமான இலங்கை மலரும் - சஜித்
எந்தவொரு சவால் விடுக்கப்பட்டாலும் உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தி மீண்டும் வலுவான,வளமான நாட்டை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிலியந்தலவில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்,
நாட்டின் பொறுப்பை ஒப்படைத்தால்..
“பிரபஞ்சம் வேலைத்திட்டம் என்பது எம் நாட்டிற்கு பழக்கப்பட்ட ஒரு திட்டமல்ல.
மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பல்வேறு விடயங்களைச் செய்யப் பழகியதே தவிர, அதிகாரம் இல்லாத போது மக்களுக்காக சேவை செய்ய நம் நாடு பழக்கப்படவில்லை. இது சம்பிரதாய கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம்.
முறைமை மாற்றத்தை கோருபவர்களுக்கு இது மிகவும் வெற்றிகரமான முறைமை மாற்றமாகும். இந்நாட்டில் சுகாதாரத் துறைக்கு,கல்வித் துறைக்கு,இதுபோன்ற பணியை வேறு எந்த எதிர்க்கட்சியும் செய்யவில்லை.
நாட்டை வங்குரோத்தாக்கி நாட்டுக்கு எந்த ஒரு பணியையும் ஆளும் கட்சி செய்வதாக இல்லை.
ஏதேனும் ஒரு தருவாயில், தற்போதைய எதிர்க்கட்சியிடம் மக்கள் நாட்டின் பொறுப்பை ஒப்படைத்தால், மூச்சு,பிரபஞ்சம் வேலைத்திட்டங்கள் போன்று எமது நாட்டின் நிதிப் பிரச்சினையை வெற்றிகரமாக தீர்த்து வைப்போம்.
"இல்லை" "முடியாது" "பார்ப்போம்" போன்ற வார்த்தைகள் என்னிடம் இல்லை.
அரசியல் மேடைகளில் தம்பட்டம் அடிக்கும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த பஸ்களை வழங்கும் திட்டம் நகைச்சுவையாக இருந்தாலும், 2022 ஆம் ஆண்டில்,சில பாடசாலைகளில் பல்வேறு பயணங்களுக்கான போக்குவரத்துக் கட்டணமாக கிட்டத்தட்ட 20 இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலவசமாக பஸ் கொடுப்பதன் மூலம் இவ்வளவு பெரிய தொகை வசூலிப்பது குறையும். இது இந்நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது.
ஸ்மார்ட் நாட்டுக்கான அடித்தளம்
இளைஞர்களைப் பகடைக்காயைப் போல பயன்படுத்தும் தரப்பால் இன்னும் நாட்டுக்குச் சேவை ஆற்றப்படவில்லை. அத்தரப்பு தங்கள் கட்சி அலுவலகங்களை மிகவும் ஆடம்பரமாக நிர்மானித்துள்ளனர்.
என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் வாடகை வீட்டில் தான் இயங்கி வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் கட்சி நிதியை தன் விருப்பப்படி செலவிடுவதில்லை. அத்தகைய நிதி பிரபஞ்சம்,மூச்சு போன்ற மக்களுக்கு பயனுள்ள திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்படும்.
நாம் எவ்வளவு பணத்தைக் கொண்டிருந்தாலும் சரி, படித்தவர்களாக இருந்தாலும் சரி, ஒழுக்கம் மிக்க சமுதாயத்தை உருவாக்குவது எமது கடமை.
எமது நாட்டில் சில பிள்ளைகளுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆற்றல்கள் இருந்தாலும்,இந்நாட்டின் அரச கட்டமைப்பில் அவர்களிடமிருந்து சேவைகளைப் பெறுவதற்கான கல்வி முறையொன்று நடைமுறையில் இல்லை. இது மிகவும் பரிதாபகர நிலை.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னுரிமைப் பணியாக முறையான பாதுகாப்பு கருவிகளைக் கொண்ட கணினி உரிமையாளரையும் இணைய நுகர்வோரையும் உருவாக்குவதன் மூலம் ஸ்மார்ட் நாட்டை உருவாக்கும் அடித்தளம் நிறுவப்படும்” - என்றார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
