“அமெரிக்காவுக்கு நாங்கள் சொல்லவருவது என்னவென்றால்” - இப்படி எச்சரித்த தலிபான் அரசாங்கம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமே தலிபான்களுடன் நல்லுறவை பேணி வருகின்றன என தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதாக தெரிவித்துள்ள சீனா, அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதியளித்துள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (
Jabihullah Mujahid) கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தலிபான்களுடன் முறையான உறவை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு இந்த 2 நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்க தவறுவது பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும். உலகுக்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும்.
அமெரிக்காவுக்கு நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால், எங்கள் அரசை அங்கீகரிக்காமல் தொடர்ந்தும் இருந்தால் ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடரும். அது பிராந்தியத்தின் பிரச்சினை.
பின்னர், உலக பிரச்சினையாக கூட மாறும். இருவருக்கும் முறையான தூதரக உறவுகள் இல்லாமையே கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணமாகும்.
போருக்கு காரணமான பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்திருக்க முடியும், அரசியல் சமரசத்தின் மூலமும் தீர்த்திருக்கலாம். எங்கள் அரசுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.