முதன்முதலில் பொது வெளியில் தோன்றினார் தலிபான் தலைவர் !
தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா (HaibatullahAkhundzada) வரலாற்றில் முதல்முறையாக பொதுவெளியில் வந்து ஆதரவாளர்களிடம் பேசியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் கலந்து கொண்டுள்ளார்.
சனிக்கிழமையன்று, இராணுவ வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக அகுந்த்ஸடா தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவுக்கு சென்றதாக தலிபான் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட வீடியோ தலிபான் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு, அமெரிக்க நடத்திய ட்ரோன் தாக்குதலில் அப்போது தலைவராக இருந்த முல்லா அக்கர் மன்சூர் (Mulla Akkar Mansoor) கொல்லப்பட்டதை தொடர்ந்து, அகுந்த்ஸடா தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்துள்ளார்.
புதிய தலிபான் அரசில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டதுடன் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.