இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மார்ட்டின் ரைஸர் பேராதரவு
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதித்தலைவர் மார்ட்டின் ரைஸர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதித்தலைவர் மார்ட்டின் ரைஸரை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
பொருளாதார மீட்சி

இதன்போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை உலக வங்கியிடம் கோரியுள்ள புதிய சலுகை நிதியானது பொருளாதார சீர்திருத்தங்கள், கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டம் ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டமைப்பு சீர்திருத்தங்கள்

அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப எவ்வாறு உதவ முடியுமென்பது குறித்தும் பொருளாதார மீட்சிக்கான ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதித்தலைவர் மார்ட்டின் ரைஸர் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன்களை மறுசீரமைத்து அதனை வெளிப்படைத்தன்மையுடன் ஒரு நிலையான பாதையில் வைத்திருப்பது மிக முக்கியமானது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.