கடத்திப் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர் தொடர்பில் காவல்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு!
கொழும்பில் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொரளை பொது மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு – பொரள்ளை மயானத்தில் மகிழுந்து ஒன்றிற்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில், தனியார் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் நேற்று முந்தினம் மீட்கப்பட்டிருந்தார்.
மாரடைப்பு
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தினேஸ் ஷாப்டரின் காரில் கிடைத்த சாட்சியங்கள் மற்றும் சம்பவ இடத்தில் பெற்றுக்கொண்ட சாட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வெளிநாடு செல்ல தடை
அந்த விசாரணைகள் தொடர்பிலான விடயங்களை பொரளை காவல்துறையினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, பிரையன் தோமஸிற்கு வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், தினேஷ் ஷாப்டரின் தொலைபேசி அழைப்பு பதிவுகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

