ஹர்த்தாலுக்கு ஆதரவு இல்லை... யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அதிரடி அறிவிப்பு
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவு வழங்க முடியாது.
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் இது குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் தேசியம் சார்ந்த அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றுடன் கலந்துரையாடல்களை நடாத்தி இருக்க வேண்டும்.
மாணவர் ஒன்றியம்
அதன்பின்னரேயே ஒரு முடிவுக்கு வந்து பொதுவான திகதியில் ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்திருக்க வேண்டும்.
இது எதுவும் இலலாமல் ஒரு கட்சியை சேர்ந்த ஒருசிலர் தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துவிட்டு அதற்கு ஆதரவுகோரும் பட்சத்தில் மாணவர் ஒன்றியமாகிய எம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது சுயமாக இயங்கும் ஒரு அமைப்பாகும். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும், இராணுவத்தின் பிடியில் உள்ள தமிழ் மக்களது காணிகள் மக்களிடமே மீளளிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் எம்மிடம் மாற்றுக் கருத்து இல்லை.
அரசியல் சுயலாபம்
கடந்த காலங்களில் தமிழ் மக்களது உரிமை சார் பிரச்சினைகளுக்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக நாங்கள் குரல் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயமே.
ஆனால் ஒரு சில தரப்பு தமது சுயலாபங்களுக்காக மேற்குறித்த விடயங்களை கையில் எடுத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டோம், அதற்கு துணை போகவும் மாட்டோம்.
மேலும் பல்கலைக்கழகத்தில் நாளைய பாடநேர அட்டவணைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளன. பாடங்கள் உரிய நேர அட்டவணையின்படி ஒழுங்காக நடைபெறும்.
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வழமை போல கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

