சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானம்: ஹர்த்தாலுக்கு கிளம்பும் தொடர் எதிர்ப்புக்கள்
சுமந்திரனால் (M. A. Sumanthiran) தனிப்பட்ட முறையில் தீர்மானம் எடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்காமல் எதிர்ப்பினை தெரிவிப்பதாக மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் (Sabaratnam Sivayoganathan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுமந்திரன் கொண்டுவரும் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் பின்னால் சதித்திட்டங்கள் தமிழ் தேசிய நீக்கம் என்பது இருக்கும் என்பது உண்மை.
நீதியை இலங்கை அரசிடமே கேட்டு இந்த ஹர்த்தால் போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள்
தற்போது வடக்கு கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஆகிய இணைந்து ஐ.நாவை நோக்கி அறிக்கைகளை எழுதுவதுடன் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் இந்த ஹர்த்தாலை முன்னெடுப்பது என்பது உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதாகவும் அதனை ஏற்றுக்கொள்வதாகவுமே அமையும்.
கடையை அடைப்பதன் மூலம் உலகப் பொதுமுறையை வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதை வெளியில் காட்டுவதே அவரது நோக்கம்.
சர்வதேச பொறிமுறை
சர்வதேச பொறிமுறைக்கு ஊடாக நீதி வேண்டும் என்று நாங்கள் வேண்டி நிற்கின்றபோது அந்த பொறிமுறையை ஒரு மடைமாற்றும் செயலாகவே இந்த ஹர்த்தாலை நாங்கள் பார்க்கின்றோம்.
கடந்த கால வரலாற்றை பார்க்கின்ற போது தமிழ் இனத்துக்கு எதிரான பலவிதமான காரியங்களை முன் நின்று செயல்படுத்தியவர் இந்த சுமந்திரன்.
எனவே, சுமந்திரன் கொண்டு வருகின்ற எந்த ஒரு விடயத்திலும் எமக்கு எள்ளளவும் நம்பிக்கையும் இல்லை.
உரிமையாளர்கள்
கடை உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்கள் சுமந்திரனின் விருப்பத்திற்குரியவர்கள் அல்ல.
அனைத்து கட்சிகளுக்கு ஆதரவு வழங்குகின்றவர்களும் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர், இப்படியாக இருக்கும்போது அனைத்து கட்சிகள், சிவில் சமூகங்கள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்துடனும் கதைத்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும்.
தமது கட்சிக்குள் எடுக்கின்ற முடிவுகள் போல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அனைவரையும் ஒரு வாய் வார்த்தையால் ஸ்தம்பிதம் அடைய வைக்க முடியும் என நினைப்பது அவரது முட்டாள்தனம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

