புலம்பெயர்ந்தால் அவன் நாடற்றவனாகி விடுவானா...!
வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் இந்நாட்டின் தமிழ் மக்களின் அரசியலில் தலையிடக்கூடாது என்கின்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.
அடிப்படை முகாந்திர மற்ற இக்கருத்தை அவர் என்ன காரணத்துக்காக முன்வைத்தார் என்பதோ அல்லது யாரை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான ஒரு கருத்தை பொதுவெளியில் சொன்னார் என்பதோ ஊகிக்க முடியாத ஒரு அம்சம் கிடையாது.
அலிசப்ரி வெளிநாட்டு அமைச்சர் என்பதற்காக இதை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விடவும் முடியாது.
பொறுப்பற்ற கருத்தை பொது வழியில் முன்வைத்தார்
ஒரு இனத்தின் மீது பொறுப்பற்ற விதத்திலான ஒரு கருத்தை குற்றச்சாட்டாகவும் எச்சரிக்கை போன்ற தொனியில் முன்வைப்பதையும் தமிழர் தேசம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லாது என்பதை அமைச்சர் விளங்கிக் கொள்ள வேண்டும்.
முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாடுகளுக்கான இலங்கையின் குரலாகவே வெளிநாட்டு அமைச்சர்கள் எப்போதும் திகழ்வர். அலி சப்ரி கற்றறிந்த மனிதர் ஆயினும் அவர் ஏன் இவ்வாறு பொறுப்பற்ற கருத்தை பொது வழியில் முன்வைத்தார் என்பதுதான் கேள்விக்குறியது.
உலகில் உள்ள சகல நாடுகளிலும் அங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்கள்தான் அந்நாட்டின் அரசியல் பொருளாதாரம் மற்றும் அடிப்படை விடயங்களில் பெரும் செல்வாக்கு செலுத்தும் ஒரு சக்தியாக இருப்பர் என்பது ஒன்றும் புதிய விடயம் கிடையாது.
இன்று அனைவருடைய கண்களும் பாலஸ்தீன ரஃபாவின் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு எதிராக குவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையை நாம் அனைவரும் அறிவோம். அத்துடன் அங்கு மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயத்தை உலகறியச் செய்ததில் பாலஸ்தீனத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பு மிகப் பெரியதும் அர்ப்பணிப்புக்குரியதுமாகும்.
வீரியமிக்க சக்தி
மேலும், யாராலும் கேள்விக்குற்படுத்த முடியாத வீரியமிக்க சக்தியாக அவர்களின் குரல் எழுப்பப்பட்டு வந்தமையையும் உலகம் மறந்து விட முடியாது.
வெளிநாட்டு அமைச்சர் இந்த விடயத்தை எவ்வாறு அனுகுவார் என்பது குறித்து அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதாவது பாலஸ்தீனத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இஸ்ரேல் தலையிடுவதை பாலஸ்தீனிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் கண்டும் காணாததுமாக சகித்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும் என்று அவர் நினைக்கின்றாரா?
பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அத்துமீறல்
பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அத்துமீறலை ஏற்றுக்கொள்ள தயார் இல்லாத அவர் அங்கிருந்து புலம்பெயர்ந்த மக்களை தமது தேசத்தின் இருப்புக்கான அத்தனை முயற்சிகளையும் மனமார ஏற்றுக்கொள்கின்ற அவர் எப்படி ஈழத் தமிழர்கள் விடயத்தில் இவ்வளவு மெத்தனமாக நடந்து கொள்வார்.
அது எந்த வகையில் நியாயமானது, தனக்குப் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தேசிய பட்டியல் ஊடாக தந்து பலமிக்க பெறுமதியான அமைச்சையும் தந்தமைக்காக சிங்களத்தை திருப்தி படுத்த அவர் வேறு வேலைகளை செய்து கொள்ளட்டும்.
அதற்காக தமிழர் உரிமைகளின் மீதும் தமிழர் இருப்பின் மீதும் தமிழர் அபிலாசைகள் மீதும் தமிழர் கனவுகள் மீதும் கை வைக்க அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்த நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்து மரணத்தருவாயில் தொங்கிக் கொண்டிருந்த பொழுது புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளும் பொருளாதார ஒத்துழைப்பும் இந்நாட்டின் அனைத்து சிங்கள தலைவர்கள் உட்பட அனைவருக்கும் தேவைப்பட்டது.
தமிழரின் சுதந்திரமான நடமாட்டம்
எனினும், தமிழர் இருப்பு குறித்தும் தமிழரின் சுதந்திரமான நடமாட்டம் குறித்தும் தமிழரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்தும் கவலைப்படுகின்ற புலம்பெயர் தமிழர்கள் இந்நாட்டு மக்களின் மீது அக்கறை கொள்ளக்கூடாது அல்லது அவர்களது விவகாரங்களில் இவர்கள் ஆர்வத்தோடு செயல்படக்கூடாது. அவற்றை கண்டுகொள்ளாமல் கணக்கெடுக்காமல் புறந்தள்ள வேண்டும் என்று வேண்டுவது எந்த வகையில் நியாயமானது யாரால் அதை ஏற்றுக்கொள்ள முடியும்.
இந்நாட்டில் இருந்தவர்கள் ஏன் புலம்பெயர்ந்து சென்றார்கள் என்ற கேள்விக்கு பதில் மறைமுகமானது கிடையாது. அது மிக வெளிப்படையானது. இன பாகுபாட்டின் மீதான கறை படிந்த ஆயுதக்கரங்கள் அவர்களை இந்நாட்டை விட்டு துரத்தி அடித்தன.
மக்களின் அரசியல் உரிமை
அதற்காக தங்கள் மண்மீது பற்றற்றவர்களாக அக்கறையற்றவர்களாக பொறுப்பில்லாதவர்களாக சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் செயல்பட மாட்டார்கள். அவர்களின் மூச்சுக்காற்று இந்த மண்ணிலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை அலி சப்ரி விளங்கிக் கொள்ள வேண்டும்.
எங்கள் மக்களின் அரசியல் உரிமைக்காக எங்கள் மக்களின் இருப்புக்காக எங்கள் மக்களின் சுதந்திரத்துக்காக புலம்பெயர் தமிழர்களின் குரல் ஆண்டாண்டு காலமாக ஒழித்துக் கொண்டிருந்ததை போல் இனிவரும் காலங்களிலும் மிக அழுத்தமாக ஒலிக்கும் அதை எந்த ஒரு சக்தியாலும் அவ்வளவு எளிதில் தடுத்து விட முடியாது என்பதை இவர் போன்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதற்கோ அல்லது கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கோ தயார் இல்லாத இவர் போன்ற நபர்கள் தமிழர் இருப்பு சார்ந்தும் தமிழர் உரிமை சார்ந்தும் புலம்பெயர் தமிழர்களின் ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்த எவ்விதமான பொருத்தமற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளத் தலைப்பட வேண்டும்.
புலம்பெயர் தமிழர்கள்
ஐ .பி. சி தமிழ் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் மீது அண்மையில் ஒரு அரசியல்வாதி காட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். புலம்பெயர் தமிழர்கள் இந்நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது என்பதை மையப்படுத்தியதாகவே அந்த விமர்சனம் அமைந்திருந்தது.
இங்கு தத்தமது நிதி தேவைகளுக்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு அனைவருக்கும் அவசியமாகின்றது.
எனினும், அவர்கள் வாய்மூடி மௌனிகளாக உணர்ச்சியற்றவர்களாக தங்களது தேசங்களில் வாழ வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
அப்போதுதான் இவர்கள் இந்த இனத்துக்குச் செய்யும் துரோகத்தை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் அல்லது அடையாளப்படுத்த மாட்டார்கள் அல்லது அதைப் பேசுபொருளாக்க மாட்டார்கள் என்று இவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
புலம்பெயர் தமிழர்கள் ஈழத்து அரசியலில் தாக்கம்
புலம்பெயர் தமிழர்கள் புலத்தில் வாழ்கின்ற மக்களின் மீது கொண்டிருக்கின்ற உண்மையான அக்கறையின் வெளிப்பாடாகவே அவர்களின் உரிமைகளுக்கான அரசியல் செயற்பாட்டுக்கான சுதந்திர இருப்புக்கான குரல் என்பதை யாரும் மறந்து விடவோ மறுதலித்து விடுவோ முடியாது. ஒரு சில சுயநலமிக்க செயல்பாட்டாளர்கள் இருக்க முடியும் அது தவிர்க்கவும் முடியாது.
அது உலக வழக்கில் இயல்பானது, இந்த விதிவிலக்கை தவிர்த்து விட்டு ஒட்டுமொத்த தேசியத்தின் குரலாக எப்போதும் புலம்பெயர் தமிழர்கள் இருப்பார்கள் என்பதை யாராலும் அசைக்க முடியாது.
விருப்பம் இல்லாவிட்டாலும் அக்குரலை அனைவரும் செவிமடுத்துத் தான் ஆக வேண்டும். அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும், எப்போதும் ஒரு ஆக்கபூர்வமான அழுத்தமிக்க சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் ஈழத்து அரசியலில் தாக்கம் செலுத்திக் கொண்டே இருப்பார்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு எதிர்கால செயற்பாடுகளை இத்தகைய பொறுப்பற்ற அரசியல்வாதிகள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் அவர்களுக்கு என்ன செய்வார்கள் என்பதை விரைவில் அவர்கள் நடைமுறையில் காண்பார்கள்.
புலம்பெயர் தமிழர்களின் உடல்கள் மாத்திரமே உலகெங்கும் பல்வேறு நாடுகளில் அலைந்து கொண்டிருக்கின்றன.
அதைவிடுத்து, அவர்களது உணர்வுகள் உயிர் மூச்சாக தம் தாய் மண்ணிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 04 June, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.