யாழில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களின் முதலீடு! மனந்திறந்த உயர்ஸ்தானிகர் பற்றிக்
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை இன்று(21.01) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் டித்வா புயல் தாக்கத்தின் பாதிப்புக்கள் தொடர்பாக வினவிய போது, டித்வா புயல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20023 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகளை சுத்தம் செய்வதற்காக 13168 குடும்பங்களுக்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட 15260 பாடசாலை மாணவர்களுக்கு 15000 ரூபா வீதம் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கி தொடர்ச்சியான கல்விக்கு உறுதுணையாகவிருந்ததாகவும், மேலும், சேதமடைந்த வீதிகள் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள்
இதன்போது, கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிதியினை அரசாங்கத்திற்கு வழங்கி செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , டித்வா புயலுக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தவகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு மிகவும் அத்தியாவசியமாகவுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பம் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் எமது இளைஞர் யுவதிகள் திறமை பெற்றுள்ளதாகவும், பொருத்தமான வேலைவாய்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மாவட்டம் மற்றும் நாடு பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடையும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைதொடர்ந்து, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாக தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |