நாங்க அரசியல்வாதிகள்!! எங்களுக்கு மறதி தேசிய வியாதி
தேசியம் என்ற மந்திரத்தை உச்சரித்து, அதன் மயக்கத்தில் ஆழ்ந்துள்ள மக்களை மேலும் மேலும் ஏய்த்து வாழும் சூட்சுமத்தை தெரிந்துகொள்பவனே இங்கே சிறந்த அரசியல்வாதியாகிறான் நீண்டகாலம் நிலைத்தும் நிற்கின்றான், இவை தவிர இன்னொரு முக்கியமான அம்சமும் ஒரு அரசியல் வாதிக்கு இருக்க வேண்டும் ஏனென்றால் அது அவர்களின் தேசிய வியாதி, அதுதான் மறதி.
வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் செய்து, விடுதலை பெற்றுவிட்ட பின்னர் தடுப்புக்காவலிலும் துன்பப்பட்டு உழன்று, நோய்வாய்ப்பட்ட அன்னையை பார்த்துக்கொள்ளவேண்டும் அனுமதி தாருமய்யா, தாயைக்காண தாயகம் செல்லவேண்டும் என்று கோரிய சாந்தன் வித்துடலாய் மண்ணகம் வந்து சேரும் வரை எங்கள் தேசியம் பேசும் அரசியல் வாதிகளுக்கு கண்ணும் குருடாகி, காதும் செவிடாகி வாய்களும் ஊமையாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் உரிமை கோருபவர்களில் பெரும்பாலானோர் பேசாமல் தானே ஐயா இருந்தார்கள்.
இது என்ன பிரமாதம் உயிரிழந்த வித்துடலாய் மண்ணகம் வந்தவனின் ஆத்ம சாந்திக்கேனும் வந்தவர்களோ என்றால் அதுவுமில்லை, ஓரிருவர் தவிர அனைவரும் பாராமுகமாய் இருந்தது இந்தியாவின் ஆதரவுக்காகவா, இல்லை வேறேதேனும் ஆதாயத்திற்காகவா, ஒருவேளை மறந்திருப்பார்களோ.
பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்கும் நீதிபதி ஐயகோ! என்னுயிருக்கு ஆபத்து இந்த நாடு வேண்டாம் நகர் வேண்டாம் நான் உழைத்த பெயர் புகழ் எதுவுமே வேண்டாம். நீங்குகின்றேன் இந்நாட்டினை விட்டு என்று சென்ற போது கறுப்புக் கொடி என்ன வீதிக்கு வீதி ஆர்ப்பாட்ட முழக்கம் என்ன நீதிபதிக்காக நீதி வேண்டும் இது தமிழருக்கு இழைக்கப்பட்ட பேரிழுக்கு, எங்கயப்பா இண்டைக்கு அவையள் ஒரு வேளை மறந்திட்டினமோ
இது மட்டுமா, இங்கால முல்லைத்தீவுக்கு வருவம். அட எங்கட குருந்தூர் மலை நாட்டில இருக்கிற விகாரைகளில பாதி மலையில தான் இருக்கு அதால தான் என்னவோ எங்கட பௌத்த பிக்குகளுக்கு மலைகளைக் கண்டாலே விட மனமில்லை. ஆயிரம் மலையில புத்தர் ஆவாகணம் செஞ்சாலும் பிக்குகளுக்கு என்னவோ தமிழரின்ர மலைகளில தான் கண் அடக்கடவுளே மலையில விகாரை வேணும் எண்டு கேட்டு வாங்கினா கூட பரவாயில்லை காலங்காலமாக புத்தர் இஞ்ச தான் நிண்டவர் எண்டு சொல்லி அடிச்செல்லோ புடுங்கீனம் . அதிலயும் கொடுமை ஆதிசிவனுக்கு பொங்கல் வைக்கிறது. பிக்குகள் பிரச்சினை பண்ணுவினம் எண்டு தெரிஞ்சு பொங்கல வைச்சு அரசியல் செய்ய புத்துக்குள்ள இருந்து புடையன் வெளிக்கிட்ட மாதிரி கொடிய தூக்கிக்கொண்டு தமிழ்த்தேசியம் கதைச்சுக்கொண்டு ஒரு கூட்டம் வரும்.
கடைசியா அவைய போன வருச பொங்கலில கண்டது. இனி இந்தவருசப் பொங்கலுக்கு தான் வருவினம் போல. இல்லாட்டி வெடுக்குநாறிக்கு வருவினமோ இன்னும் குரலைக் காணேல்ல ஒருவேளை மறந்திட்டினமோ அட அதுக்குள்ள தான் சாந்தன் வந்திட்டாரே,
அவர் ஒரு கைதியா இருக்கேக்க உதவி செய்ய மனம் ஒவ்வேல்ல. விடுதலையான போது நாட்டுக்கு கொண்டுவரவும் எண்ணேல. கடைசியா நோய்வாய்ப்பட்டு உழன்று திரியேக்கயும் தாயைப் பார்க்க வழி செஞ்சு குடுக்க இவைக்கு வக்குமில்லை. ஈற்றில அவர் இறந்த பிறகும் கூட விரைவில் வீடு சேர்த்தார்களா அதுவுமில்லை. கதைக்க வேண்டிய இடத்திலயும் வேலை செய்யவேண்டிய நேரத்திலயும் மட்டும் எங்கட அரசியல்வாதிகள் எங்க போவினமோ தெரியாது. ஆனால் தேவையில்லாத நேரத்திலை தேவையில்லாத பிரச்சினைக்கு மடடும் முன்னுக்கு வந்திடுவினம்.
கொஞ்ச நாளில அத அப்பிடியே விட்டுட்டு அடுத்த பிரச்சினைக்கு போயிடுவினம், ஒருவேளை முதல் பிரச்சினைகளை மறந்திடுவினமோ.
இன்று நடக்கும் இந்தப் பிரச்சினைகளில் மடடுமல்ல அன்று 83இல் எமது யாழ் மண்ணில் கம்பீரமாகத தலைதூக்கி நின்ற அரும்பெரும் பொக்கிஷத்தை பெரும்பான்மை இனவாதிகள் அக்கினிக்கு இரையாக்கி ஆடி கொண்டாடிய போது பெயருக்கு குரல் கொடுத்து விட்டு அதை அப்படியே மறந்து போன அரசியல் வாதிகளின் வாரிசுகள் தானே இன்று ஆள்கிறார்கள். அந்த அரசியல் வியாதி இவர்களுக்கும் தொற்றத்தானே செய்யும். “அதனால்த்தான், நாங்கள் அரசியல் வாதிகள் தேசியம் பேசும் எங்களின் தேசிய வியாதி மறதி“ என்று செயற்படுகின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |