தமிழ்க் கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவுப் பெருவிழா!
ஜேர்மனி தமிழ்க் கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தின் 30 ஆவது நிறைவை முன்னிட்டு முத்தகவை நிறைவுப் பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதன்படி, குறித்த விழா கடந்த 04 ஆம் திகதி 3 மணிக்கு அரங்க வாசலில் தமிழாலய நிர்வாகி மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க, தமிழாலய ஆசிரியர்கள் மாணவர்கள் நிர்வாகிகளோடு அயல் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இணைந்து சுமார் 450க்கும் மேற்பட்ட பார்வையாளர்களோடு வெகு விமர்சையாக ஆரம்பமானது.
இதில் முதலாவதாக தேச விடுதலைக்காக போராடிய அனைத்து மாவீரர்களுக்காகவும், தன்நிலம் காக்க இன்னுயிர் ஈந்த அப்பாவித் தமிழ் மக்களுக்காகவும், ஆழிப் பேரலையால் இழந்த எம் மக்களையும் நினைந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள்
அரங்க அசைவுகளாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரின் வாழ்த்துச் செய்தியுடன், பிரதம சிறப்பு விருந்தினர்களாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகைத்தந்து சிறப்பித்த கலாநிதி சிதம்பரநாதன் சபேசன், கேம்பிறிச் பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி டேவிட் விக் மற்றும் பேராசிரியர் சந்திரவதனி தேவதாசன் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் இணைந்து மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பமானது.
தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் 2025 நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வில் வளர் தமிழ் 1 தொடக்கம் 12 (உயர்தரம்), பாலர் மழலையர் நிலை வரை அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிய நிகழ்வும், 2025 கேம்பிறிச் பல்கலைக்கழகத் தமிழ்மொழி உயர்தரம் சித்தியடைந்த 17 மாணவர்களுக்கு மதிப்பளிப்பு பரிசில்கள் வழங்கப்பட்டது.
ஆசிரியர்களும் கௌரவிப்பு
தமிழாலய இணை ஆசிரியர்களுக்கு கற்பித்த ஆண்டுகளின்படி பட்டயங்களும் மற்றும் நீண்டகாலம் கற்பித்த தொடர்ந்தும் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பட்டயங்களும் தங்கப்பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு முத்தகவை சிறப்புமலர் வெளியீடு இடம்பெற்றது.
தமிழாலய இணை ஆசிரியர்கள், தமிழாலய பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களின் நெறியாக்கத்தில் சிறப்பு நடனங்கள், கவிதைகள், உரையாற்றல்கள், இசைநிகழ்வுகள் வில்லுப்பாட்டு போன்ற பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
