கறுப்பு ஜூலையில் பிடுங்கப்பட்ட குட்டிமணியின் கண்கள்…
ஜூலை 23 ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது. இலங்கைத் (Sri Lanka) தீவே ஈழத் தமிழ் மக்களின் குருதியால் நனைந்தது. தமிழ் மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் சிறிலங்கா அரசு துடைத்தழித்தது.
தமிழ் மக்கள்மீதான இனவெறுப்பை அரசியல் பேச்சுக்களாகப் பேசிய அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன (J.R. Jeyawardena) , தனது அரச அமைச்சர்களை கொண்டு இலங்கைத் தலைநகரில் நிலைபெற்றிருந்த தமிழ் மக்களின் கல்வி, பொருளாதாரம், இனப்பரம்பல் என்பவற்றை அழிக்க மேற்கொண்ட திட்டம் வடக்கு கிழக்கு வரை நீண்டிருந்தது.
அதில் மற்றொரு நடவடிக்கையாக தமிழ் அரசியல் கைதிகள் மீதான இனப்படுகொலையும் நடந்திருந்தது.
மகத்தான போராளிகள்
ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அகலாத வடுவாக அமைந்த கறுப்பு ஜூலைப் படுகொலைகள் ஜூலை 23இல் தொடங்கப்பட்ட நிலையில் ஜூலை 25ஆம் நாளில் அதன் தொடர்ச்சியாக தமிழ் அரசியல் கைதிகள் மீதான படுகொலை இடம்பெற்றது.
அன்றைய நாட்களில் தமிழீழ விடுதலைக்காக போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அதேவேளை கொலை, கொள்ளை, தகாத முறை குற்றங்களுக்காக சிங்கள அரசியல் கைதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் எவ்வாறு விடுதலைப் புலிகளின் திருநெல்வெலித் தாக்குதலை தகுந்த வாய்ப்பாக சொல்லிக் கொண்டு கறுப்பு ஜூலைப் படுகொலையை சிறிலங்கா (Sri Lanka) அரசு நிகழ்த்தியதோ அதே போன்று கறுப்பு ஜூலையை தகுந்த வாய்ப்பாகக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் மீதான படுகொலையும் நடந்தது.
அரசினால் – அரச அமைச்சர்களின் கட்டளையில் சிறைக்கு வெளியில் இருந்த காடையர்களாலும் சிறைக்கு உள்ளே இருந்த காடையர்களாலும் தமிழ் அரசியல் கைதிகள் மீதான சித்திரவதை தொடங்கியிருந்தது. அவர்களை படுகொலை செய்யும் நோக்கில் தொடங்கிய அந்த துன்புறுத்தலின் இறுதியில் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
தமிழீழ விடுதலை வரலாற்றில் மகத்தான போராளிகளாக மதிக்கப்படுகின்ற குட்மணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட ஈழவிடுதலைப் போராளிகளே இவ்வாறு வெலிக்கடைச் சிறையில் சிங்களப் பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் படுகொலையின் பின்னால் என்ன காரணம் இருந்தது என்பது இன்றும் ஈழ மண்ணை அதிரச் செய்யும் பின்னணியைக் கொண்டது.
எனது கண்கள் தமிழீழத்தைக் காணட்டும்
தமிழீழ விடுதலை இயக்கம் எனப்படும் ரெலோவின் முக்கியஸ்தர்களாக குட்டிமணி, தங்கதுரை உள்ளிட்டோர் அக்காலத்தில் இருந்தனர். குட்டிமணியும் தங்கதுரையும் பலாலி சிறையில் அடைக்கப்பட்ட ஒரு காலத்தில் அச் சிறையில் இருந்து அவர்கள் தப்பித்தனர்.
தவறுதலாக தங்கதுரைக்கு காலில் காயம் ஏற்பட அவரைத் தூக்கிக் கொண்டு 10 கிலோமீற்றர் வரை ஓடிச் சென்று அவர்கள் இருவரும் தப்பிக் கொண்டனர். தமிழீழ விடுதலைக்காக துடிப்புக் கொண்ட இளைஞர்களாக இவர்கள் இருந்தனர் என்பதை அக்காலத்தவர்கள் இச் சம்பவத்தைக் கூறி நினைவுகொள்வதனையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில் 1981 மே மாத நாட்களில் இன விடுதலை சார்ந்த செயற்பாடுகளுக்காக குட்டிமணிக்கு தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட வேளையில், உங்கள் இறுதி ஆசை என்ன என்று நீதிபதி நீதிமன்றத்தில் வினவியிருந்தார். அதற்கு அவர் அளித்த பதில் கண்டு அன்றைய நீதிமன்றமே அதிர்ந்து வியந்ததாம்.
“நான் தூக்கில் இறந்த பின்பு தனது இரண்டு கண்களையும் கண்பார்வை இல்லாத ஒரு தமிழருக்கு தானாமாக வழங்கவேண்டும். என்னால் பார்க்க முடியாமல் போகும் ஈழத்தை எனது கண்களாவது பார்க்கட்டும்” என்றார் மாவீர்ர் குட்டிமணி.
சிறிலங்கா நீதித்துறையை நிராகரித்த தங்கதுரை
ஈழத் தமிழ் மக்களுக்கு தனி ஈழமே தீர்வு என்பதையும் எந்த நிலை வந்தாலும் அந்த தாகத்தை விட்டுக்கொடுக்க மகத்தான போராளிகள் தயார் இல்லை என்பதையும் மிகச் சிறந்த தலைவராக அளப்பெரிய போராளியாக மாவீரன் குட்டிமணி அன்று சிங்கள நீதிமன்றில் எடுத்துரைத்தார்.
அதேபோல சிறிலங்கா நீதிமன்றம் குட்டிமணி, தங்கதுரை, ஜெகனுக்கு தூக்குத் தண்டனை அறிவித்தபோது மாவீரன் தங்கதுரை அவர்கள் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க விடயத்தை பதிவாக்கியுள்ளார்.
ஈழத் தமிழ் மக்கள் ஒருபோதும் சிங்கள தேசத்துடன் இணைந்தவர்கள் இல்லை என்பதை வலியுறுத்தி அவர்கள்மீது பிரிவினைக் குற்றம் சுமத்த எந்த அடிப்படையும் இல்லை என்பதை வலியுறுத்தி தங்கதுரை இறுதி உரை ஆற்றினார்.
அதன் அடிப்படையில் சிறிலங்கா நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், அவை அடிப்படையில் ஈழத் தமிழ் இனத்தை அழிக்கும் அமைப்பிலும் நோக்கிலும் உருவாக்கப்பட்டவை என்பதையும் எடுத்துரைத்து அதற்காக தமது உயிரையும் தியாகம் செய்திருந்தனர்.
கறுப்பு ஜூலை
கறுப்பு ஜூலையின் இனப்டுகொலைத் தீ வெலிக்கடை சிறைச்சாலை கதவுகளையும் திறந்துகொண்டு உள் நுழைந்தது. கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயுதங்களுடன் தமிழ் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்த இனவாதிகள் தமிழ்க் கைதிகளை வெட்டி வீழ்த்தினர்.
என் கண்கள் தமிழீழத்தை காணட்டும் என்ற வீரமிகு பேச்சினை அறிந்திருந்த சிங்களக் கதைகளில் குட்டிமணியை வெட்டிக் கொன்று அவரது கண்களை பிடுங்கி எடுத்து தங்கள் கால்களால் நசுக்கி மகிழ்ந்தனர். குட்டிமணி உள்ளிட்ட போராளிகளின் உடல்களை இழுத்துச்சென்று சிறைச்சாலை முற்றத்தில் இருந்த புத்தரின் முன்னால் போட்டு மகிழ்ந்தாடினார்கள்.
இப்படியான வெறுப்புமிகு செயல்கள் தமிழ் இனத்தின் வரலாற்றில் தீராத துயராகவும் வடுவாகவும் படிந்துவிட்டது. பின்னாட்களில் இந்த வடுக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தியது.
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
ஈழ மக்களின் தாயகக் கனவுக்காக தம்மை அர்ப்பணித்த குட்டிமணி, தங்கதுரை வரலாற்றின் தலைவர்களாகவும் மாவீரர்களாகவும் வழிகாட்டினார்கள். குட்டிமணியின் கனவு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் காலத்தில் சாத்தியமானது.
குட்டிமணியின் கண்கள் காணாத தமிழீழம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காலத்தில் நிகழ்ந்தது. இன நலன்களுக்காக இலட்சிய வேள்வியில் தம்மை மாய்த்த இந்த மாவீரர்கள் தமிழ் சமூகத்திற்கு மாத்திரமின்றி உலக சமூகத்திற்கே உன்னத வழிகாட்டிகளாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 25 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.