கறுப்பு ஜூலை கலவரம் ஒரு மாறாத வடு : பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!
கறுப்பு ஜூலை (Black July) தினத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் (UK) புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, நேற்றையதினம் (23/07/2024) தமிழருக்கான சுதந்திர வேட்டை அமைப்பு மற்றும் பிரித்தானியா வாழ் இலங்கை தமிழ் மக்களின் பங்குபற்றுதலுடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை (Sri Lanka) உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கறுப்பு ஜூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி (UNP) உறுப்பினர்களால் திட்டமிடப்பட்ட போதிலும், அதன் பின்னர் கணிசமான சிங்கள பொதுமக்களின் பங்கேற்புடன் 1983 ஜூலை 23 இரவு, தலைநகர் கொழும்பில் (Colombo) தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கி, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
அந்தகவகையில், 1983 ம் ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கா (Sri Lanka) அரசு, சிறிலங்கா சிங்கள பாதுகாப்பு படையினர், இனவெறி கொண்ட காடையர்கள் மற்றும் பொதுமக்களால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பான கறுப்பு ஜூலை சம்பவம் இன்னமும் தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவாகவே இருக்கிறது.
எனவே, இதனை நினைவு கூருமுகமாகவும், அதற்கான நீதி வேண்டியும், இன்னமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாது இருப்பதற்கு தமது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா அரசு
இதன்போது, 'சிறிலங்கா அரசு தீவிரவாத அரசு, சிறிலங்கா ராணுவம் தீவிரவாத ராணுவம்' என்ற கோஷங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்ததாக போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |