கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு…
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு வடுவாக கறுப்பு ஜூலைப் படுகொலை இருக்கிறது. இத் தீவின் மக்கள் குருதியாலும் நிர்வாணத்தாலும் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அதனை சிறிலங்கா அரசு கலவரம் என்று அழைத்து தன்னைக் காக்க முயன்றது.
சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களின் கல்வி, தொழில் வளம், பொருளாதாரம், இனப்பரம்பல், கலாசாரம் என்று ஒரு இனத்தின் வாழ்வியல்மீது தொடுத்த மிட்டமிட்ட படுகொலையாக போராக ஜூலைப்படுகொலை நிகழத்தப்பட்டது.
இதுவே ஈழத் தமிழ் மக்களின் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய பின்னணியுமானது.
மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் வீரமரணம்
ஈழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்த எண்பதுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் சிறிய அளவிலான தாக்குதல்களை நடாத்தி வந்தார்கள்.
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இலங்கை இராணுவத்திற்கு எதிரான சமர் ஒன்று இடம்பெற்றது.
விடுதலைப் புலிகளை தாக்கும் நோக்கில் வந்த இராணுவ அணியொன்றை இடைமறித்து புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. இதனால் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சமர் மூண்டது.
இதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த தளபதி செல்லக்கிளி அம்மான் இதில் வீர மரணமடைந்தார். புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழர்களால் சிங்களவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று திட்டமிட்டு கதை பரப்பட்டது. இதனால் கொழும்புவில் இருந்த தமிழர்களை கொன்று அழிப்போம் என்றும் இனவெறி பரப்பட்டது. இதனால் சிங்கள வன்முறையாளர்கள், தமிழர்களை தாக்கத் தொடங்கினர்.
வீதிகளில் சென்ற தமிழ் மக்கள் வீதிகளிலேயே அடித்து விரட்டப்பட்டார்கள். பலர் அடித்துக் கொல்லப்ட்டார்கள். எரியும் நெருப்பில் உயிரோடு தமிழர்கள் போட்டப்பட்டார்கள். தமிழ் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அவர்களை அடித்துக் கொலை செய்தார்கள்.
நிர்வாணத்தாலும் நனைந்த இலங்கைத் தீவு
ஜூலை 23இல் தொடங்கிய வன்முறை ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தது. கொழும்புவில் மாத்திரம் சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கொழும்புவில் சிங்கள வன்முறையாளர்கள் படுகொலைகளை நிகழ்த்திய தருணத்தில், வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவமும் தமிழ் மக்களை கொன்று குவித்தது. யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழ் மக்கள் புலிகள் என்ற பெயரில் படுகொலை செய்யப்ட்டார்கள்.
அதேபோல வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய ஈழ விடுதலைப் போராளிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இலங்கை தீவு ஈழத் தமிழர்களின் குருதியாலும் நிர்வாணத்தாலும் நனைந்தது. கொழும்பு வீதிகளில் இருந்து தமிழர்களின் உடல்களில் மூட்டப்பட்ட தீ உயர எழுந்தது. தமிழர்களைப் பிடித்து நிர்வாணமாக்கி அவர்களை அவமதிப்பு செய்து வன்முறையாளர்கள் மகிழ்ந்தார்கள். மிக மிக கோரமான முறையில் மனித குலத்திற்கு விரோதமான முறையில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஒரு குறிப்பிட்ட குழுவாலோ, அல்லது ஒரு தரப்பாலே இப்படி பரவலாகவும் நீண்ட நாட்களுக்கும் வன்முறைகளை மேற்கொள்ள முடியாது. கறுப்பு ஜூலைப் படுகொலை அன்றைய அரசால்தான் மிக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது.
1958இல் நடந்த இனப்படுகொலை
கறுப்பு ஜூலை இலங்கையின் முதல் படுகொலையல்ல. அதற்கு முன்னர் 1958களிலும் இத்தகைய இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. எழுதுபகளிலும் நிகழ்த்தப்பட்டன. அப்போது விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம்மீது தாக்குதல்கள் எவற்றையும் நடாத்தவும் இல்லை.
1956இல் தனிச்சிங்கள சட்டத்தை அன்றைய பிரதமர் பண்டார நாயக்கா கொண்டு வந்த வேளையில் அன்று நாடாளுமன்றத்தில் இருந்த சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகள், இலங்கையில் தமிழ்நாடு ஒன்றை உருவாக்கப் போகிறீர்கள் என்றும் தமிழர்கள் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்றும் எச்சரித்தார்கள்.
இலங்கை அரசின் தமிழ் இன ஒடுக்குமுறை செயற்பாடுகளாலும் உரிமை மறுப்புக்களாலும் தனித் தமிழீழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழ் அரசியல்வாதிகள் சென்றனர். அதுவே அன்றைய இளைஞர்கள் தமிழீழத்தை அமைக்க ஆயுதம் ஏந்தவும் காரணமானது.
தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து அறவழிப் போராட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள் முன்னெடுத்த வேளையில்தான் 1958களில் மூந்நூறு ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்ட்டார்கள். அதேபோல 1981இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு அறிவுமீதும் புத்தகங்களின் மீதும் மிகப் பெரிய வன்முறை நிகழ்த்தப்ட்டது.
ஆக விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களின் எழுச்சியை மக்களை படுகொலை செய்து அழிக்கவும் திசை திருப்பவும் அன்றைய இலங்கை அரசு தீர்மானித்தது. இதனால் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய மறுகணமே ஈழ மக்கள்மீது பெரும் வன்முறைப் போர் நடாத்தப்பட்டது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் முற்கூட்டிய பேச்சு
ஜூலைப் படுகொலை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, “யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை.
இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார்.
இப்பிடி பேசி சில நாட்களிலேயே வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து மாபெரும் மகிழ்ச்சி தென்னிலங்கைக்கு வழங்கப்பட்டது. இன்று இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்காவின் மாமனார்தான் அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கத்தை கண்டும் வடக்கு கிழக்குமீது வெறுப்பைக் கொண்டும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், தமிழர் தரப்புமீது வன்முறையை மேற்கொள்ள நேரிடும் என்ற தொனியில் எச்சரித்தும் இருந்தார்.
கறுப்பு ஜூலைப் படுகொலையை அன்று ஜெயவர்த்தனா அரசில் அமைச்சராக இருந்த சிறில் மத்யூ உள்ளிட்ட அரச தரப்பினரால்தான் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை இலங்கை அரசியல் கட்சிகள் கூறின.
தனிநாடு கோரக் கூடாது என்ற நோக்கம்
குறுகியதொரு காலப் பகுதியில் இவ்வாறு பெரும் வன்முறை நடக்கிறது என்றால் அதற்குப் பின்னால் அரசின் திட்டம் இருந்திருக்கிறது என்பதையும் உணராலாம். ஏற்கனவே இனவழிப்புக்கள் நடந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு 83 ஜூலை இனப்படுகொலையை நடாத்தியுள்ளார்கள்.
சிறில் மத்யூ போன்றவர்கள் குறுகிய குழுவில் வன்முறையாக இல்லாமல் சிங்கள பொதுமக்களின் பற்கேற்புடன் நடாத்த நினைத்தார்கள். அதன் ஊடாக ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது, தனிநாடு கோரக் கூடாது, தமது உரிமைகளை கேட்கக்கூடாது என்ற எச்சரிக்கைகளை விடுக்க நினைத்தார்கள். கொழும்புவில் இருந்து ஈழ மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி விரட்டப்பட்டார்கள்.
மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்த தமிழ் மக்கள் கூட அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். வடக்கு கிழக்குதான் உங்கள் நாடு அங்கே சென்றுவிடுங்கள் என்றால் போல் தென்னிலங்கையில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டதும், தென்னிலங்கையில் ஈழ மக்கள் சிந்திய குருதியும் அனுபவித்த நிர்வாணங்களும் எரியூட்டப்பட்ட நெருப்பும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஒற்றைத் தீர்வு தனித் தமிழீழம் என்பதை நிர்பந்தித்தது.
கறுப்பு ஜூலை இலங்கையில் இரண்டு நாடுகள்தான் தீர்வு என்ற நிலைக்கு ஆளாக்கியது. நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்தும் கறுப்பு ஜூலை தந்த நினைவுகள் அழியவில்லை. மிகப் பெரிய வன்முறை ஒன்று விட்டுச் செல்லும் வடுவின் தடம் அகல்வது அவ்வளவு எளிதல்ல.
இப்போது சிங்கள மக்களின் மத்தியில் சில மனமாற்றங்களும் உருவாகியுள்ளன. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டும், தமிழ் மக்களையும் புலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துநிலைகளும் உருவாகி வருகின்றன.
ஆனால் சிங்கள மக்களை இன்றும் பிழையான வழிக்கு தூண்டும் அரசியல்வாதிகளும் உள்ளனர். சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் பேரினவாத்தை பேசுகின்றபோதும்கூட எமக்கு ஜூலைப்படுகொலைகளே நினைவுக்கு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 22 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.