தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
இன்றும் நல்ல நினைவிருக்கிறது. அது போர் ஓய்ந்த காலம். கிளிநொச்சி நகரின் வீதிகளில் தொலைக்காட்சிகளில் கார்த்திகைப் பூ சின்னத்துடன் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளைக் கண்டு எங்கள் மக்கள் அதிசயத்துடன் பார்த்தனகர். அதிலும் செய்தி ஒளிபரப்பாகும் முன்னர் பாய்ந்து வரும் புலி சின்னம், இது தமிழீழத்தின் தேசிய தொலைக்காட்சி என்ற உணர்வைப் பெருக்கியது. 2005 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று, தேசியத் தலைமையின் எண்ணத்திலிருந்து கிளிநொச்சியில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. தமிழர்களுக்கென்று ஒரு நாட்டின் தேசிய அடையாளத்தை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய ஊடகமாக அத் தொலைக்காட்சியின் வருகை உருவானது.
உலகத்தை எட்டிய முதல் ஒளிபரப்பு
காணொளி இதழ் பற்றிச் சிந்தித்தவர்கள் எங்கள் போராளிகள்தான். உலகில் நாடுகளும் விடுதலை இயக்கங்களும் கவனம் செலுத்தாத காலகட்டத்தில், ‘ஒளிவீச்சு’ என்ற காணொளி இதழ் முயற்சி உருவானது. நிதர்சனம் உருவாக்கிய குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவை தமிழீழத்தின் கதைகளை, கள நிலவரங்களை உலகிற்கு கொண்டு சென்றன. இந்த காட்சிப் பயணத்தின் இயல்பான வளர்ச்சியாகவே தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி உருவானது. காட்சி ஊடகத்தின் தாக்கத்தை அரசியல் வெளிப்பாட்டில் இணைத்த ஒரு முயற்சியாக இது நிகழ்ந்தேறியது.
மார்ச் 26 தமிழீழ ஊடக வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகத் திகழ்கிறது. இலங்கையிலிருந்து செய்மதி வழியாக ஒளிபரப்பான முன்னோடியான தொலைக்காட்சியாக இது அறியப்படுகிறது. கிளிநொச்சியில் தொடங்கிய இந்த ஒளிபரப்பு உலகம் முழுவதும் பரவியது. ஒரு போராட்ட இயக்கம் தனது அரசியல் மற்றும் பண்பாட்டு குரலை உலக அரங்கில் வெளிப்படுத்திய தருணமாக இதுவாகும். அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய இனத்தின் குரலை காட்சியின் வழியாக எடுத்துரைக்கும் இம்முயற்சி உலகின் கவனத்தைப் பெற்றது.
ஒலியாக எழுந்த அரசியல் குரல்
ஈழ விடுதலையின் ஆரம்ப காலகட்டமான அன்றைய காலத்தில் கையெழுத்துச் சுவரொட்டிகள்தான் விடுதலைப் புலிகளின் ஆரம்ப ஊடகம். அத்துடன் கடிதங்களும் இயக்கத்தின் முக்கிய ஊடகமாகும். இப்படியாகக் குறைந்த வளங்களுடன்தான் ஊடகப் பயணம் தொடங்கியது. கையெழுத்துப் பிரசுரங்கள், சிற்றிதழ்கள், காசெட் பதிவுகள் போன்றவற்றின் மூலம் மக்களுடன் தொடர்பை பேணிய புலிகள் இயக்கம் பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட ஊடக அமைப்புகளை வளர்த்தெடுத்தது. குறிப்பாக புலிகளின் குரல் வானொலி தகவல் பரிமாற்றத்தில் முதன்மை இடத்தைப் பெற்றது. அதிலிருந்து காணொளித்துறையென விரிந்த இந்த வளர்ச்சி, வலிமையான தேசிய ஊடகங்களின் தோற்றத்திற்கு வித்திட்டது.
‘புலிகளின் குரல்’ என அறியப்பட்ட வானொலி சேவை, உள்ளகத்திலும் புலம்பெயர் சமூகத்திலும் வாழும் தமிழர்களை இணைத்தது. செய்தி, அரசியல் பகுப்பாய்வு, நினைவேந்தல் நிகழ்ச்சிகள், பாடல்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவை அதன் உள்ளடக்கமாக இருந்தன. போரின் கடின சூழலிலும் தொடர்ந்த இந்த ஒலிபரப்பு, ஒரு சாதாரண ஊடகத்தைத் தாண்டி உணர்வுகளின் குரலாகவும் போராட்டத்தின் பிரதிநிதியாகவும் இருந்தது. இனவழிப்புப் போரின் உண்மையை வெளிப்படுத்தியதால் விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் சிங்கள அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது.
காட்சியின் வழியான போராட்டம்
காட்சி ஊடகத்தின் தாக்கத்தையும் அவசியத்தையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் எப்பொதும் உணர்ந்து அதனைப் போராளிகளிடத்தில் வலியுறத்தி வந்துள்ளார். இதனால்தான் எத்தகைய போரின்போதும் ஈழ மண்ணில் திரைப்படங்கள் உருவாக்கம் பெற்றன. இதன் தொடர்ச்சியாகத் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஈழ மக்களின் தேசிய ஊடகமாக உருவானது. செய்தி நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள், போராளிகளின் வாழ்க்கைக் குறிப்புகள், மக்களின் அனுபவங்கள் ஆகியவை இதில் வெளிப்பட்டன. இது ஈழத் தமிழரின் அரசியல் கனவுகளை காட்சியாக மாற்றியதோடு, உலகத் தமிழர்களுக்கு உறவுப் பாலமாகவும் இருந்தது.
வெறுமனே தகவல்களை மாத்திரம் கொண்டு சேர்க்காமல் தமிழர் வாழ்யில் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் இருந்து காட்சிப் படைப்புக்களை கொண்டு சேர்த்தமை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் தனித்துவமாகும். அதன் வணக்கப் பாடல், அதன் நிலையக் குறியிசை என்பன அதனை வெளிப்படுத்தியது. அத்துடன் பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், நினைவேந்தல்கள் ஆகியவை இலங்கையில் தமிழீழத்தின் தனித்துவத்தை உலகிற்குக் காட்டியது. இளம் தலைமுறையினருக்குள் தேசிய உணர்வை உருவாக்கும் பணியை ஆற்றியதுடன் கல்வி, பாரம்பரியம், சமூக வாழ்வு போன்ற பல துறைகளில் நிகழ்ச்சிகள் முன்வைக்கப்பட்டன.
சவால்களை தாண்டிய முயற்சி
இந்த ஊடகப் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. தொழில்நுட்ப சிக்கல்கள், வளங்களின் பற்றாக்குறை, அரசியல் அழுத்தங்கள், ஶ்ரீலங்கா அரசின் தாக்குதல்கள் போன்ற பல தடைகள் இருந்தன. இருந்தபோதிலும் குறைந்த வசதிகளுடன் முழுமையான ஊடக அமைப்பை உருவாக்கியமை ஒரு பெரும் சாதனையே. போரின் இறுதி காலம் வரை அதன் ஒளிபரப்பு தொடர்ந்ததுடன், பின்னர் டிஜிட்டல் தளங்களிலும் தன் பயணத்தைப் பதித்தது.
இன்று களத்தில் இந்த ஊடகங்கள் இல்லை என்றபோதும் ஈழ மக்களின் நெஞ்சங்களில் அவை நிலைத்துள்ளன. தமிழீழ தேசத்தின் கனவு ஊடகங்களாக அவை என்றும் இருக்கும். இன்றைய தலைமுறைகூட அன்றைய தேசிய ஊடகங்களைத் தேடுவதும் புரட்சிப் பாடல்களைக் கேட்பதும், அன்றைய காணொளிகளைக் காண்பதும் இந்த தேசிய ஊடகங்களின் ஆவணங்களின் வழியாகவே. இப்படியாக வரலாற்றின் அடையாளமான தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி காலத்தையும் கனவையும் என்றும் வழிப்படுத்தி நிற்கும் என்பது திண்ணம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 26 March, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.