புதிய ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்த தமிழ் பொது வேட்பாளர்
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இணைந்த வடகிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வை தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கடந்த காலங்களில் எட்டு ஜனாதிபதிகளை நாங்கள் ஆதரித்தாலும் கூட கடந்த கால ஜனாதிபதிகளால் ஏமாற்றப்பட்ட காரணத்தினாலேயே ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை நாங்கள் நிறுத்தினோம்.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் வடக்கு கிழக்கை இன்னும் சிதறடிக்காமல் அவர்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்கி தமிழ் மக்களையும் இணைத்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை வழங்கி ஆட்சி செய்வாராயின் வரவேற்கத்தக்கதாகும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆகக்கூடிய விருப்பு வாக்குகள் கிடைத்தமை தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றியே ஆகும்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |