தமிழினப்படுகொலையின் நீதிக்காக கனடாவில் எதிரொலிக்கும் குரல்
தமிழினப்படுகொலை குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை நாம் தொடர்ந்து உறுதியாக வலியுறுத்துவோம் என கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ்ர்(Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.
தமிழர் மரபுரிமை மாதத்தை முன்னிறுத்தி வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாம் ஜனவரி மாதம் முழுவதும் கடும் உழைப்பாளிகளைக் கொண்டாடுகின்றோம்.
தமிழினப்படுகொலை
கனடாவில் வாழும் தமிழர்கள் அவர்களது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருக்கும் அதேவேளை, பல தசாப்தகாலமாக எமது சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர்.
தமிழர்களின் இப்பாரம்பரிய வரலாறு பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். அவர்களது பாரம்பரிய கலாசாரமானது மொழி, இசை, கலை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் என்பவற்றின் ஊடாக வெளிப்படுகின்றது.
பாரம்பரிய நம்பிக்கைகள், குடும்பம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஊடாக வழிநடத்தப்படும் கனேடியத் தமிழர்களால் இங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் வணிக நிலையங்கள், கலாசார அமைப்புக்கள் மற்றும் சமூக ஊடக நிலையங்கள் என்பன கனேடிய சமூகத்தையும், பொருளாதாரத்தையும் சீரமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன.
இருப்பினும் நாம் கொண்டாடும் இந்த தமிழ் மரபுரிமை மாதம் துரதிஷ்டவசமாக அதற்குரிய முழுமையான கௌரவத்தை இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை மிகமோசமான தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள்.
எனவே கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியினரான நாம் இந்த தமிழர் மரபுரிமை மாதத்திலும், இவ்வாண்டு முழுவதும் மேற்குறிப்பிட்டவாறான மிகமோசமான குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை உறுதியாக வலியுறுத்துவோம்.
அதேவேளை கனடாவில் வாழும் தமிழ்ச்சமூகத்தினரைக் கொண்டாடுவதில் நாம் பெருமையடைகின்றோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |