கனடாவின் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம்! சர்ச்சைகளை கிளப்பிய நெவில் ஹெவேகே
கனடாவில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோர் மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு அரசியல் சூழ்ச்சியாக தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் போன்ற சட்டமூலங்களை கொண்டு வருவதாக கனடாவில் வசிக்கும் இலங்கையரான கலாநிதி நெவில் ஹேவகே தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு காரணங்களுக்காக கனடாவில் குடியுரிமை பெற முயற்சிக்கும் சிங்கள மக்களும் நாட்டில் இல்லாத நிலைகளை வெலியுலகுக்கு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம் தொடர்பில் தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித கடத்தல்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
இன்னொரு விடயம் என்னவென்றால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சித்தாந்தத்தைக் கொண்ட இந்த மக்கள் மனித கடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.
எங்களிடம் உள்ள தகவல்களின்படி, கனடாவில் உள்ள இந்த மக்கள் இலங்கையில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குச் செல்ல ஒரு அகதியிடமிருந்து 35,000 முதல் 60,000 அமெரிக்க டொலர்கள் வரை வசூலிக்கின்றனர்.
இலங்கையில் தமிழர்களின் இனப்படுகொலை
இது அவர்களின் தொழில். இந்தத் தொழிலைச் செய்ய, அவர்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள் என்பதை சர்வதேச சமூகத்திடம் நாம் சொல்ல வேண்டும்.
உள்நாட்டு போர் முடிந்துவிட்டது. எனவே, இலங்கையில் தமிழர்களின் இனப்படுகொலை நடக்கிறது என்று அவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.
கனடாவில் சுமார் 60,000 பேர் குடியுரிமையற்றவர்களாக உள்ளனர். கனடாவிலோ அல்லது வேறு மேற்கத்திய நாட்டிலோ குடியுரிமை பெற விரும்புவதால் அவர்கள் இலங்கையை அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர்.
தமிழர்கள் மட்டுமல்ல, பல்வேறு காரணங்களுக்காக இங்கு குடியுரிமை பெற முயற்சிக்கும் சிங்கள மக்களும் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
