தமிழகத்தில் கூலி தொழிலாளியின் வங்கிக்கணக்கில் திடீரென வந்து குவிந்த ரூ.1 கோடி பணம்
தமிழகத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய கூலி வேலை செய்யும் தொழிலாளி ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு திடீரென ஒருகோடி ரூபா பணம் வந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 34 வயதுடைய விவசாயக் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவரது வங்கிக் கணக்கிலேயே திடீரென ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து அறிவித்தல்
இது தொடர்பாக அவருக்கு வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து அறிவித்தல் வந்துள்ளது. அந்த அறிவித்தலில், அவரது பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் ஒரு கோடி ஐந்து லட்சத்து நான்காயிரம் ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பணம் வந்ததே தெரியாத கூலி தொழிலாளி
இந்த அறிவித்தல் வந்த பிறகே, மணிகண்டனுக்கு தனது வங்கி கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதே தெரியவந்துள்ளது. இது அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனடியாக அவர் வருமான வரித் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று, தனக்கும் இந்த பணப் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து வருமான வரித் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூலித்தொழிலாளியின் கணக்கில் திடீரென ரூபா ஒரு கோடிக்கும் அதிக பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளமை அவரது கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
