54 தமிழக மீனவர்கள் கைது - இந்தியா விடுத்துள்ள அறிவிப்பு
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 54 இந்திய மீனவர்களின் விவகாரம் குறித்து மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துடன் கையாளப் போவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கடற்படையால் புதன்கிழமை இரவு 54 இந்திய மீனவர்கள் மற்றும் ஐந்து படகுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மனிதாபிமானத்துடன் தீர்க்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு உடனடி தூதரக உதவி மற்றும் அவசரகால பொருட்களை வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மீனவர்களுக்கு தூதரக உதவியை விரைவாகப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம், என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி இந்திய மீனவர்களின் கைது உட்பட இருநாட்டுப் பிரச்சினைகள் பற்றி தொழில்நுட்ப உதவியுடன் இருநாட்டுத் தலைவர்களும் பேச்சு நடத்தியிருந்ததை தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.