தமிழரசுக் கட்சியின்றி தமிழினம் முன்னேற முடியாது : கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு
இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) பிரதான கட்சியாக உள்ளமையினால் அந்தக் கட்சியை தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள (Colombo) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையை தொடர்கின்ற வகையில் கட்சியினுடைய முடிவுகள், பதவிகள் அமையக் கூடாது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலர்
கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை சரியாக புரிந்து கொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலருடைய ஆதிக்கத்தை கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாக தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலை தள்ளும்.
ஒரு பொதுப்புள்ளியில் சந்திப்பதற்கு தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரனுடன் (S. Shritharan) ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை
அதேபோல் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் (Selvam Adaikalanathan) பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த பேச்சுவாரத்தைகளை அடுத்த ஆண்டில் முன்கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றோம்.
தமிழரசுக் கட்சி சரியான மாற்றங்களை செய்யுமானால் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் ஒரு சுபீட்சமாக அமையும்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |