களவாடப்பட்ட சங்குச் சின்னம்! இவர்கள் திருந்தவேமாட்டார்களா??
2009 இற்குப் பிறகு தமிழ் தேசியம் என்பது யாரோ ஒருவரால் களவாடப்படுகின்ற அல்லது ‘ஹைஜாக்’ பண்ணப்படுகின்ற ஒரு விடயமாகவே மாறிவிட்டது.
பொதுவாக தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளால் இந்தத் ‘தமிழ் தேசியம்’ களவாடப்படும். அல்லது தனி நபர்களால் களவாடப்படும்.
இப்படி தேர்தல் காலங்களில் ஏதோ ஒரு தரப்பால் தமது அரசியல் சுயலாபத்துக்காகக் களவாடப்பட்டு, தேர்தல் முடிந்ததும் கிடப்பில் தூக்கிப் போடப்படுகின்ற ஒரு காரியமாகவே ‘தமிழ் தேசியம் என்கின்ற’ அந்த விடயம் கடந்த 15 வருடங்களாகக் கையாளப்பட்டுவருகின்றது.
ஆனால் கடந்த 15 வருங்களில் முதல் தடவையாகத் தமிழ் தேசியம் என்கின்ற கருத்துருவாக்கத்தை தமிழ் மக்களே தமது கரங்களில் எடுத்தது என்பது அண்மைய ஜனாதிபதித் தேர்தலில்தான்.
தமிழ் தேசியத்துக்காக ‘தமிழ் சிவில் சமூகமே’ ஒரு அமைப்பாக, கட்டமைப்பாக தன்னைக் கட்டமைத்துக்கொண்டு சங்குச் சின்னத்தில் போட்டிபோட்டு வரலாற்றில் தடத்தைப் பதித்திருந்தது.
வேலை கிடைக்கும், இடமாற்றம் கிடைக்கும் என்று எந்தவித சலுகையையும் எதிர்பார்க்காமல், தோற்போம் என்பது 100 வீதம் உறுதியாகத் தெரிந்தருந்தும் கூமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் ‘தமிழ் தேசியம்’ என்ற ஒன்றுக்காகவே சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்திருந்தார்கள்.
தேர்தலுக்கு முன்னரேயே ஒரு கோரிக்கை - உத்தரவாதம் தமிழ் சிவில் அமைப்புக்கள் சார்பாக வழங்கப்பட்டிருந்தது.
தமிழ் தேசியத்தை முன்னிறுத்திப் போட்டிபோடும் வேட்பாளர் அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிபோடக்கூடாது. தமிழ் தேசியத்தின் அடையாளமாக முன்நிறுத்தப்படும் சங்குசின்னமும் எதிர்வரும் காலங்களில் பாவிக்கப்படக்கூடாது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தை மிறி, எந்தவித தர்மமோ தார்மீகமோ இல்லாமல் தமிழ் மக்களின் அந்தப் பொதுச்சின்னத்தை ஒரு தரப்பு களவாடிவிட்டதாக கோபம் வெளியிட்டு வருகின்றார்கள் தமிழ் சிவில் அமைப்புக்கள்.
களவாடியது மாத்திரமல்ல, எந்தவித குற்ற உணர்வோ, கூச்சமோ இல்லாமல் அந்தச் சின்னத்தில் போடடிபோடவும் தயாராகி வருகின்றார்கள்.
நேற்று நடைபெற்ற இணையவழியான சிவில் சமூகப் பிரநிதிகள் கூட்டத்தில் தமது அதிருப்திகளை கோபமாக வெளியிட்டிருந்தார்கள் சில பிரதிநிதிகள்.
‘போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிவருகின்ற தரப்பு, தமிழ் மக்கள் மீது நேரடியாகப் படுகொலைகளைப் புரிந்த நபர்கள், மண்டையன் குழு என்ற பெயரில் தமிழ் மக்களை சின்னாபின்னப்படுத்திய தரப்பு, தூதரகங்களினதும், காப்ரேட்டுக்களினதும் ஏஜன்டுக்களாகச் செயற்பட்டுவந்த தரப்புக்களே தமிழ் மக்களின் தேசியத்தின் அடையாளமாக முன்னெடுக்கப்பட்டுவந்த சங்குச் சின்னத்தை, சிவில் அமைப்புக்களின் அனுமதி இல்லாமல் களவடியுள்ளதாக கோபத்தை வெளியிட்டுள்ளார்கள்.
வெறும் கோபத்தை மாத்திரம் வெளியிட்டுவிட்டு வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு குப்புறப்படுக்காமல், கள்வர்களையும், துரோகிகளையும் அம்பலப்படுத்தவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது என்பதை இந்த சிவில் சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அரசியல் தரகர்களையும், கள்வர்களையும், கொலைகாரர்களையும், போதைப்பொருள் வியாபாரிகளையும் முற்றாகவே ஒதுக்கிவிட்டு கொள்கைப் பிடிப்புள்ள இனத்தை உண்மையாகவே நேசிக்கின்ற இளைஞர்களை தேர்தல்களில் களமிறக்குகின்ற நகர்வுகளுக்கு சிவில் சமூகம் தன்னை முன்நகர்த்தவேண்டும். தேர்தல் அரசியல் வாக்கு அரசியலைக் கடந்து சமூக அரசியல் செய்கின்ற ஒரு இனமாக தமிழ் இனத்தை தகமைப்படுத்த வேண்டும்.
தென்னிலங்கையைப் பார்த்தும் தமிழ் இனம் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லையென்னால், இந்த இனத்தை கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |