கொச்சைப்படுத்தப்படும் ஈழ விடுதலை போராட்டம்! ஆவேசத்தில் முன்னாள் எம்பி
சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது கதைகளை கூறி புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முஸ்லீம்களின் வெளியேற்றம்
இது குறித்து சி.சிவமோகன் மேலும் கூறுகையில்,
தமிழர்களின் ஒரு நீண்டகால அரசியல் ஆயுதபோராட்டம் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தை அடைந்தது.தமிழ் இளைஞர்களிடம் வலிந்து ஆயுதங்களை திணித்தது அரசுகளே. மக்கள் மீதான பாரிய இனப்படுகொலைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு பின்னாலே ஈழ விடுதலை போராட்டம் முளைகொண்டு எழுந்தது.

தற்போது பலரும் புதுப்புது கதைகளை சொல்லி புலிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அறிக்கைகளை விடுகின்றனர். சட்டத்தரணி சுவஸ்திகா என்பவர் முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு நடத்தப்பட்டதாக ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் நான் வன்னியில் இருந்தேன். முஸ்லீம்களை வெளியேற்றிய அந்த நிகழ்வு ஏன் நடைபெற்றது என்பதற்கு பாரிய வரலாறு உள்ளது.
ஒரு இனத்தில் இருப்பவனை அதே இனத்தை சேர்ந்த ஒருவன் காட்டிக்கொடுத்தால் அவன் துரோகி என்ற அடையாளங்களை சொல்லி இன்றையகாலத்திலும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
ஈரானில் அந்த நாட்டு இராணுவத்தை காட்டிக்கொடுத்தவர்கள் ஈரானை பொறுத்தவரை துரோகிகளே. எமது மண்ணிலும் தமிழர்கள் ஈழவிடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்தால் துரோகி என்ற ரீதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது.
ஆனால் அந்த நேரத்தில் இன்னுமொரு இனம் எமது போராட்டத்தை காட்டிக்கொடுக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் மீது மரண தண்டனைகளை விதிக்க கூடிய நிலமை தவறு என்ற கோணத்தில்அன்றுமுஸ்லீம்கள்வெளியே அனுப்பிவைக்கப்பட்டார்கள். அது இனச்சுத்திகரிப்பு அல்ல எமது ஈழவிடுதலை போராட்டத்தில் ஒரு அங்கமாக நடைபெற்றது.
சுவஸ்திகாவின் கருத்து
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை உருவாக்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்புறமாக இருந்த நிலங்கள் அனைத்தும் முஸ்லீம் மக்களுடையது. அந்த நிலத்தை சுவீகரித்து வைத்தியசாலையை கட்டியிருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை. தமிழர்களின் காணிகளை எடுத்தே அந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது.

தற்போது அங்கு முஸ்லீம்கள் வாழ்க்கின்றார்கள் எனில் விடுதலைப்புலிகளால் அவர்களது மண்ணோ சொத்துக்களோ சுவீகரிக்கப்படவில்லை என்றே அர்த்தம். இதனை ஒரு பிழையான கோணத்தில் வெளிப்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் அது தவறனாது.
போராட்டத்தின் பின்னணியினை பார்க்காமல் குறித்த விடயத்தில் கருத்துச்சொல்ல சுவஸ்திகாவிற்கு எந்த அருகதையும் இல்லை. அப்படியானவர்கள் தங்களது கதைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
முஸ்லீம் யூத் போரம் என்ற பெயரில் கறுப்பு ஒக்ரோபர் என்ற விடயத்தை முன்வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு கருத்தை கூறியிருந்தார்கள் நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுபவர்களை புறக்கணிப்போம் என்று நல்ல விடயம் அதையே தான் நாங்களும் கூறுகிறோம்.
தமிழ்மொழி பேசும் முஸ்லீம்கள், தமிழர்கள், மலையகத்தமிழர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் தமிழ் பேசுகின்றோம். அந்த ரீதியில் ஒற்றுமையாக செயற்ப்பட்டு எமது உரித்துக்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இன,மதவாதத்தை தூண்டி தமிழ் பேசுவர்களை மூன்றாக கூறுபோட்டு வைத்துள்ளனர். தற்போது இதனை சொல்பவர்கள் மத வாதத்தை தூண்டி அதிலிருந்து தமது அரசியலை வளர்க்க முயற்சிக்கின்றார்கள் என்றே பார்க்கலாம்.
மூன்றாக நாம் பிரிந்து நிற்கும் போது காலத்திற்கு காலம் சிங்கள தேசம் ஒவ்வொரு இனத்தையும் பிரித்து அடிக்கின்றது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் முஸ்லீம்கள் எப்படி தாக்கப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியும். மலையக தமிழர்கள் குடியுரிமை பறித்து கலைக்கப்பட்டார்கள் இறுதிப்போரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்.
இவை எல்லாம் ஏன் நடக்கிறது என்று சிந்தித்தால் நாங்கள் அனைவரும் தமிழர்களாக ஒன்றுபடவேண்டிய தேவையை காட்டுகின்றது.
எனவே இந்த இடத்தில் ஈழ விடுதலை போராட்டத்தை நடாத்தி 30 ஆயிரம் போராளிகளை பலிகொடுத்து இலட்சக்கணக்கான தமிழ்மக்களை பலிகொடுத்து நிற்கும் எமது இனத்தின் மீது இனச்சுத்திகரிப்பு என்ற வசனத்தை பாவிக்க யாரும் முற்படக்கூடாது அது மிகவும் தவறு என்பதை கூறிக்கொள்கிறேன் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |