சுதந்திர மீட்சிக்கான போராட்டம் ஆரம்பம் - மீண்டும் எழுச்சி கொள்கிறது தமிழர் தாயகம்; விடுக்கப்பட்டது அழைப்பு!
வடகிழக்கு இணைந்த தமிழர் ஆட்சியை வலியுறுத்தி மீண்டும் தமிழர் தாயகத்தில் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழர்களுக்கான உரிமையே எமக்கான சுதந்திரம் அதனை அடையும் வரை தமிழர்களின் போராட்டம் தொடரும் எனவும் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் சுயாட்சியே தமிழர்களின் சுதந்திர மீட்சிக்கான நாள். இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கிய ஆங்கிலேயர்கள் வடகிழக்கு தமிழர்களின் சுதந்திரத்தை பறித்துக் கொண்டதோடு தமிழர்களை சிங்கள பெரும்பான்மை அரசிடம் அடகு வைத்து விட்டு சென்றுவிட்டனர்.
தமிழ் முஸ்விம் மக்களை மோதவிட்டு பார்க்கும் அரசாங்கம்
தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு 75 வருடங்கள் ஆகிறது. இதன் தாக்கம் கடந்த 75 ஆண்டுகளாக வடகிழக்கு தமிழர்கள் தங்களது சுதந்திர சுயாட்சிக்காக பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர். இலங்கையின் 75 வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ம் திகதி நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே இலங்கையை அந்நிய நாடுகளிடம் அடகு வைத்துவிட்டு மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய சிறிலங்கா அரசு தற்போது வடகிழக்கு தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்து அதனையும் சீனா போன்ற நாடுகளிடம் அடகுவைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக தமிழர் தாயகப் பகுதியான வடகிழக்கு மாகாணங்களை பிரித்து கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் உறவுகளை மோதவிட்டு தமிழர் தாயகத்தை கலவர பூமியாக மாற்றும் சதி திட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அரசியல் தீர்வு என்ற போர்வையில் வடக்கிற்கு ஒரு தீர்வும் கிழக்கிற்கு ஒரு தீர்வும் என வடகிழக்கை பிரித்து வடகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களை மோதவிட்டு தமிழர்களுக்கான அரசியல் தீர்வை குழப்புவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மீண்டும் போராட்டம்
இந்நிலையில் இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து எழுச்சிப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர். எனவே கடந்த P2P மக்கள் எழுச்சி போராட்டத்தின் பின்னர் மீண்டும் வடகிழக்கு தாயக மக்கள் தங்களின் சுதந்திர தாகத்தை இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் போராட்டமாக இந்த போராட்டம் எழுச்சி பெற இருக்கிறது.
தேர்தல் ஒன்றை எதிர் கொள்ள உள்ள நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தமிழர்களின் சுதந்திர தாகத்தை வலியுறுத்தும் வகையில் வடகிழக்கு இணைந்த தமிழ் தேசியத்தின் எழுச்சியை பறைசாற்றும் வகையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் தாயகத்தில் உள்ள தமிழர்களும் அவர்களுக்கு துணையாக புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இப்போராட்டமானது கிழக்கில் மட்டக்களப்பு வரை விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் அலையாக திரண்டு வந்து இணைந்து கொண்டு தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேச சமூகத்திற்கு ஜனநாயக வழியில் தெரிவிப்பதற்காக ஒன்றுபடுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
ஜனநாயக போராட்டமாக மாற்ற வேண்டும்
எனவே இப்போராட்டத்திற்கு தமிழர் தாயகத்தில் இருக்கும் மாணவர் சமூகங்கள், சிவில் சமூக அமைப்புகள், மதப் பெரியார்கள், தமிழ் தேசியக் கட்சிகள், ஊடகவியலாளர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் என அனைவரும் பங்குபற்றி தங்களது ஆதரவை வெளிக்காட்ட வேண்டும். இந்த போராட்டத்தை மாபெரும் மக்கள் எழுச்சி கொண்ட ஜனநாயக எழுச்சி போராட்டமாக மாற்ற வேண்டும்.
இதற்காக வடகிழக்கில் உள்ள அனைவரும் இணைந்து தமிழர்களின் சுதந்திரத்திற்கா மீண்டும் ஒன்றுபடுங்கள்” என பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். “வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழ்”. “எமக்கான உரிமையே எமக்கான சுதந்திரம்”






