மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

SriLanka Mannampitiya Tamil village Telugu language
By Chanakyan Sep 14, 2021 10:32 AM GMT
Report

மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து கிழக்கிலங்கைக்கு உட்பட்டிருந்த இப்பாரம்பரிய பிரதேசமானது பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச எல்லைக்குள் முக்துக்கல், சமணன்பிட்டி, தம்பன்கடவை, கருப்பளை கண்டக்காடு, சொரிவில் திரிகோணமடு, கல்லூர் மற்றும் பிள்ளையாரடி ஆகிய பழம்பெரும் தமிழ்க் கிராமங்கள் காணப்படுகின்றன. மக்கள் வாழாத இக்கிராமங்கள் சிலவற்றின் ஒதுக்குப்புறங்களில் கைவிடப்பட்ட வயல் நிலங்கள், காடுகள், சிறு மலைகள், ஆதிகால மக்கள் வாழ்ந்த கற்குகைள் என்பன காணப்படுகின்றன.

மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் | Tamil Telugu Language Copper Sword In Mannampitiya

இவ்வாதாரங்கள் இக்கிராமங்களுக்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று மரபு இருப்பதை உறுதிசெய்வதாக உள்ளன. இந்த உண்மையை இக்கிரமங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன இந்து, பௌத்த ஆலயங்கள், ஆலய எச்சங்கள் மேலும் உறுதி செய்கின்றன.

அவ்வாறான வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றே தற்காலத்திலும் வழிபாட்டிலிருந்து வரும் தம்பன்கடுவையில் உள்ள சித்திரவேலாயுதர் கோவிலாகும். இவ்வாலயம் தோன்றிய காலத்தை உறுதி செய்யக்கூடிய நம்பகரமான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆயினும் அப்பிரதேச மக்களிடையே நிலவிவரும் வாய்மொழி வரலாற்றுக் கதைகளில் இருந்து இவ்வாலயம் முன்பொரு காலத்தில் ஆகம மரபு சாராத கிராமிய ஆலயமாக இருந்துள்ளமை தெரிகின்றது. வேல் சின்னத்தை கொண்டிருந்த இவ்வாலயம் காலப்போக்கில் ஆகம மரபில் கற்கள் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக வளர்ந்துள்ளதை உறுதிப்படுத்த முடிகின்றது.

அண்மைகாலங்களில் இவ்வாலயக் கட்டமைப்பில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு மிகப் பெரிய ஆலயமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மீள் உருவாக்கப்பணிகளின் போது கிடைத்த பழைய ஆலயத்தின் கட்டிடப்பாகங்களும், சில வழிபாட்டுச் சின்னங்களும் புதிய ஆலயத்தில் வைத்துக் கட்டப்படாது அவை ஆலயத்தின் ஒரு பகுதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அவற்றுள் ஒன்றே பழைய ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த செப்பு பட்டயத்துடன் கூடிய அலங்காரத் தூணாகும்.

இந்நிலையில் மன்னம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் தொல்லியல், வரலாற்றுச் சின்னங்களை தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து வரும் இப்பிரதேசத்திற்குரிய வரலாற்று ஆர்வலர் திரு. நகுலேஸ்வரன் பிரவின் என்பவர் இவ்வாலயத்தில் காணப்படும் செப்பு பட்டயத்தின் புகைப்படப் பிரதியொன்றை முன்னாள் சக்தி வானொலி அலைவரிசையின் பிரதானி திருமதி உமாச்சந்திரா பிரகாஸ் அவர்கள் ஊடாக எனக்கு அனுப்பி வைத்தார்.

இச்செப்பு பட்டயம் ஏறத்தாழ ஐந்தடி நீளமான தூணில் பொருத்தப்பட்டுள்ளது. தூணின் தொடக்கத்திலும், முடிவிலும் அரைவட்ட தாமரை வடிவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தூணின் நடுப்பகுதில் முழுவடிவத்தில் வடிவமைக்கப்பட்ட தாமரை புடைப்புச் சிற்பத்திற்கு வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளது.

தமிழில் உள்ள சாசனம் அக்கால மொழிவழக்கில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

(1) திருமுருக்கர் ஆலியம் ஆரு (2) முக சுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கப்படி (4) பலபேர் செத்து யா (5) சக தற்மம்” என முடிகின்றது.

தெலுங்கு வரிவடிவத்திலும் தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்ட சாசனத்தைப் படிப்பதற்கு அம்மொழியில் புலமையுடைய அறிஞர்களான பேராசிரியர் வை. சுப்பராயலு, பேராசிரியர் பொ. இரகுபதி, கலாநிதி சு.இராஜகோபால் ஆகியோருக்கு சாசனத்தின் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தேன்.

அம்மூவரும் தமிழ்ச் சாசனத்தில் சொல்லப்பட்ட செய்தியையே பெரும்பாலும் அக்கால மொழிநடைக்கு ஏற்ப தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

(1) திருமுருகா ஆலயம் ஆரு (2) முகசுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கலப்படி (4) பலபேர் சேர்த்து யா (5) சக தற்மம்” என முடிகின்றது.

வேறுபட்ட இரு மொழிச் சாசனங்களும் சொல்லும் செய்தி தம்பன் கடுவையில் உள்ள சித்திரவேலாயுத கோவில் கற்பக்கிரகத்தில் உள்ள மூலஸ்தானத்திற்கு வெங்கலப் படியை அமைப்பதற்கு பலரும் ஒன்று சேர்ந்து மக்களிடம் இரந்து (யாகசம் செய்து) பெற்றதை தானமாக வழங்கியது பற்றிக் கூறுகின்றன.

பேராசிரியர் இரகுபதி அவர்கள் தமிழில் உள்ள சாசனத்தின் தொடக்க நிலை வரிவடிவங்களில் புள்ளியிடாமலும், தொடர்ந்து வரும் வரிவடிவங்களில் புள்ளியிடப்பட்டும் சாசனம் எழுதப்பட்டிருப்பதால் இச்சாசனம் எழுதப்பட்ட காலம் 18ஆம் நூற்றாண்டு அல்லது 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் எனக் கருதுகின்றார்.

இக்காலப் பகுதியில் மட்டக்களப்பு தேசத்துக் கோயில்களின் வரலாறு கூறும் கல்வெட்டுக்கள் சில பொறிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் தமிழில் எழுதப்பட்டவை.

ஆனால் தம்பன்கடவை சித்திரவேலாயுதர் ஆலயத்து செப்புபட்டயத்தில் தமிழோடு தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளமை புதிய வரலாற்றுச் செய்தியாகக் காணப்படுகின்றது. இதற்கான காரணங்கள் வரலாற்று ரீதியாக நோக்கப்படவேண்டியவை. 15ஆம் நூற்றாண்டிலிருந்து மட்டக்களப்பு தேசம் பெரும்பாலும் கண்டியரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிராந்தியமாகவே இருந்துள்ளது.

இவ்வரசின் ஆதிகம் அநுராதபுரம், பொலநறுவை இராசதானியின் எல்லை வரை பரந்திருந்தது. கண்டியின் கடைசி சிங்கள மன்னன் ஸ்ரீவீரபராக்கிரம நரேந்திர சிங்கனுக்குப் பின்னர் அவ்வரசில் ஆட்சி புரிந்த ஸ்ரீவிஜயராஜசிங்கன் (1739- 1747), கீர்த்தி ஸ்ரீஇராஜசிங்கன் (1747-1782), ராஜாதிராஜசிங்கன் 1782-1798), ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் (1798- 1815) ஆகியோர் தமிழக மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் ஆட்சி மொழி தமிழக இருப்பினும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என்பவர்களில் தாய் மொழி தெலுங்காகவும் இருந்துள்ளது.

இதனால் இவ்வரச அதிகாரிகளின் பங்களிப்பால் தம்பன்கடவை சித்தியவேலாயுதர் ஆலயத்து வெண்கலப்படி அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுவதற்கும் இடமுண்டு. ஆனால் ஆலயத்தில் உள்ள செப்பு பட்டயம் அவ்வாலய வெண்கலப் படியானது பலர் ஒன்று கூடி பல இடங்களுக்கு சென்று மக்களிடம் இரந்து (யாசகம் பெற்று) பெற்ற நிதி உதவியைக் கொண்டே வெண்கலப் படி அமைக்கப்பட்டதாகக் கூறுவதால் இப்பணியைக் கண்டி ஆட்சியாளர்களுடன் தொடர்பு படுத்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

ஆனால் இலங்கையில் கண்டி இராசதானிக்கு முன்னரே தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களும் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. சிறப்பாக யாழ்ப்பாண இராசதானி காலத்தில் இருந்த படைப்பிரிவுகளில் சுதேச தமிழ்ப்படை வீரர்களுடன் பிறநாட்டுப் படைவீரர்களும் இணைந்து பணியாற்றியமைக்குப் பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றனர்.

அவர்களுள் தென்னிந்திய கன்னட, தெலுங்குப் படைவீரர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனர். இவ்வரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இப்படை வீரர்களில் ஒரு பிரிவினர் தமிழ் பேசும் மக்களாக இங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் தமிழர்களுடன் இணைந்து வடஇலங்கையில் உள்ள ஆலயங்கள் சிலவற்றில் பண்டாரம் என்ற பெயரில் அவ்வாலயங்களை மேற்பார்வை செய்பவர்களாகவும், பூசகர்களாகவும், மாலைகட்டுபவர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர்.

இவர்களை கோயில் பண்டாரம் என்ற பெயரில் தனியொரு சமூகமாகவும் அழைக்கப்படுகின்றது. அவர்களின் வழிவந்தவர்கள் தற்காலத்தில் மொழியால் தமிழ்ச் சமூகங்களுடன் இரண்டறக் கலந்திருந்தாலும் பண்பாட்டால் சில தனித்துவமான அம்சங்களுடன் யாழ்ப்பாணத்தின் சில ஊர்களில் வாழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது.

இது கிழக்கிலங்கைக்கும் பொருந்தும். கிழக்கிலங்கையில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பின் வரலாற்றுப் பழமைவாய்ந்த ஆலயங்களின் தோற்றப் பின்னணிகள், மக்களின் சமய நம்பிக்கைகள், சடங்குகள், கிரிகை முறைகள், வழிபாட்டு மரபுகள் என்பவை சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவை.

இங்கு தோன்றிய பாசுபத சமயத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு. இவ்வாலயங்களில் நீண்டகாலமாக பிராமணர்கள் அல்லாதவர்களே பூஜைசெய்து வந்துள்ளனர். இதற்கு கோணேஸ்வரர் கல்வெட்டே சிறந்த ஆதாரமாகக் காணப்படுகின்றது. மேலும் இங்கிருக்கும் ஆலயங்களை நிர்வகிப்பவர்கள், மேற்பார்வை செய்பவர்கள் பொதுவாக வண்ணக்கர் என்றே அழைக்கப்படுகின்றனர்.

இம்மரபு 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தோன்றி வளர்ந்ததை அண்மையில் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனமும் உறுதிப்படுத்துகின்றது. இந்நிலையில் மட்டகளப்புபூர்வசரித்திரம் என்ற மூல நூலில் இங்குள்ள ஆலயங்களில் பணி செய்த சமூகங்களில் ஒன்றாக பண்டாரத்தையும் குறிப்பிடுகின்றது.

அப்பண்டாரங்களில் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அதை உறுதிபடுத்த மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இருப்பினும் இப்பிரதேசத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சில சமூகங்கள் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதற்கு சில ஆதாரங்கள் காணப்படுகின்றன.

மட்டகளப்பு தேசத்து வாய்மொழி வரலாற்றுக் கதைகள் அப்பிரதேசத்தில் தோன்றிய புராதன ஆலயங்கள் சிலவற்றை அங்கு வாழ்ந்து வரும் வேடர் அல்லது பழங்குடி மக்களுடன் தொடர்புடுத்திக் கூறுகின்றன.

நீண்டகாலமாக ஏனைய சமூகங்களில் இருந்து விலகி காடுகளிலும், மலைகளிலும், இயற்கையான குகைகளிலும் வாழ்ந்த இம்மக்களில் ஒரு பிரிவினர் அண்மைக்காலத்தில் நடைபெற்ற யுத்தங்களுக்கு அஞ்சி நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்த போது ஏனைய மக்கள் தொடர்ந்தும் தமது பூர்வீக இடங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள இம்மக்களின் தனித்துவமான வாழ்வியல் அம்சங்கள் பற்றி அண்மையில் விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் கா.குகபாலன் அம்மக்களின் பேச்சு மொழியில் உள்ள பல சொற்களைப் புரிந்து கொள்வதற்காக அம்மொழியைப் பதிவு செய்து தமிழக அறிஞர்களான பேராசிரியர் வை.சுப்பராயலு, பேராசிரியர். விஜயவேணுகோபால் ஆகியோருக்கு அனுப்ப வைத்தார்.

அம்மொழிப் பதிவை விரிவாக ஆராய்ந்த இரு அறிஞர்களும் அம்மொழியில் பெரும்பாலும் தெலுங்கு மொழிச் சொற்களே காணப்படுவதாக அடையாளப்படுத்தியிருந்தமை இவ்விடத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டுகாலப் பகுதியில் இப்பழங்குடி மக்கள் வாழ்ந்து வரும் மட்டக்களப்பின் வாகரை போன்ற இடங்களில் நாம் களவாய்வு மேற்கொண்ட போது அம்மக்கள் சிறு குடிசைகளிலும், குகைளிலும் வாழ்ந்து வருவதைக் காணமுடிந்தது.

இந்நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் மன்னம்பிட்டி தம்பன்கடுவையில் பண்டைய குடியிருப்புகள், வயல் நிலங்கள் இருந்த இடங்கள் அண்மைக்காலங்களில் கைவிடப்பட்டு அவ்விடங்களின் ஒருபகுதி காடுகள், மலைகள், குகைகள் என்பவற்றைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது.

அத்துடன் அங்குள்ள குகைகளில் செயற்கையான சில மாற்றங்களைச் செய்து அண்மைக்காலம் வரை பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதுடன் அச்சமூகத்தினரைச் சார்ந்த சில குடும்பங்கள் தற்காலத்திலும் வாழ்ந்து வருவதாக அறிய முடிகின்றது.

இதனால் அவர்களின் தாய் மொழி தெலுங்காக இருந்திருக்கலம். இவ்வரலாற்றுப் பின்னணியில் இங்கிருக்கும் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் காணப்படும் தெலுங்கு மொழிச் சாசனத்தை இங்கு வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கவும் இடமுண்டு. இருப்பினும் இக்கருத்தை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் செய்யப்படுவது அவசியமாகும்.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி