சிறிலங்காவில் தமிழர்கள் இருப்பை இழக்கும் அபாயம்
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து இளைஞர்கள் அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது ஆபத்தானது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இன்று(22) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறிய அவர், இதன் ஊடாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பை இழக்கும் அபாயம்
சிறிலங்கா அரசாங்கமும் தமிழ் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகிறது.
இளைஞர்கள் புலம்பெயர்வதன் ஊடாக தமிழர்கள் இருப்பை இழக்கும் அபாயமுள்ளமையினால் இதனைத் தடுக்க தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழி, அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பது, சம உரிமை வழங்குவது, நீதியாக நடந்து கொள்வது.
இன்னும் ஒரு வழி இருக்கிறது அது சுலபமான வழி. அதாவது, தமிழர் இல்லாது விட்டால் அல்லது குறைந்து விட்டால் அந்தப் பிரச்சினை இல்லாதது சென்று விடும். அதனைத் தான் அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது.
இதனை அரசியல் தலைவர்கள் தெளிவான வகையில் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
