பிரித்தானிய புலம்பெயர் அமைப்புக்களால் போராட்டம் - இலங்கை அணியை தடை செய்ய கோரிக்கை
இலங்கை கிரிக்கெட் (Sri Lanka Cricket
) அணியை புறக்கணிக்க கோரி லண்டனில் பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்று லண்டன் (london) ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன் தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் தமிழ் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து (england) மற்றும் இலங்கை அணிகளுக்கெதிரான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டித்தொடர் நடைபெற்ற வேளையில் இடம்பெற்றுள்ளது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இலங்கையில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் இனவழிப்பை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தவும், பிரித்தானிய அரசாங்கம் மற்றும் சரவதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றுள்ளது.
இதன்போது "இலங்கை அணியே திரும்பி செல்", துடுப்பாட்டப் போட்டிகளின் பின்னணியில் தமிழர் இனவழிப்பை சர்வதேசத்திடம் மறைக்காதே", சர்வதேச கிரிக்கெட் சபையே..! - இலங்கை அணியை தடை செய்" போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்தின் போது வெளிப்படுத்தினர்.
இன்றையதினம் ஜெனிவாவில் 57வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கின்ற நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகவிருப்பதனை முன்னிலைப்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட 'தமிழீழ சுயநிர்ணய அமைப்பு' ஒருங்கிணைத்திருந்த நிலையில், ஏனைய பல தமிழர் அமைப்புக்களும் தமது ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |