பெண்களை மாத்திரமே கொண்ட ஒரு புதிய உலகம்
2009இல் தாயகம் கோரிய உரிமைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், அந்த யுத்தம் விட்டுச் சென்ற வலியோடான சுவடுகள் மிக அதிகம்.
யுத்தத்தின் வலி சுமந்த ஆதாரங்களாக இந்த சுவடுகள் மாறிப் போயின.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகரித்தன, விதவைகள் அதிகரித்தார்கள், குடும்பங்கள் சிதறுண்டன.. இவை அனைத்தையும் தாண்டி வேலையில்லாத் திண்டாட்டம், பசி, வாழ்வாதாரமே கேள்விக்குறி என்று யுத்தத்தைக் கடந்து வந்தவர்களை நிகழ்காலம் அச்சுறுத்தியது.
அப்படி அச்சுறுத்தலை எதிர்நோக்கிய பெண்களை ஆபத்பாந்தவன் போல கைகொடுத்தது தான் 'தப்ரபேன் சீ புட்ஸ் க்ருப்ஸ் நிறுவனம்'(Taprobane Seafood Groups).
உற்பத்தித் துறையைப் பொறுத்த வரையில் நூறு சதவீதம் பெண்களை உள்ளடக்கிய ஒரு நிறுவனமாக இது விளங்குகின்றது. அத்துடன் முழுமையாக எடுத்து நோக்கும் போது 95 சதவீதம் பெண்களை உள்ளடக்கிய நிறுவனமாக இது விளங்குகின்றது.
யுத்தம் முடிவுற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் யுத்தத்தின் பிடியில் இருந்து கடுமையாக பாதிக்கப்பட் கை, கால்களை இழந்தவர்கள் மாத்திரம் இன்றி பெண் தலைமைத்துவ குடும்பங்களை தாங்கிப் பிடிக்கும் பெண் ஆணிவேர்கள் பலர் பணிபுரிகின்றனர்.
அவரவர் இயலுமைக்கு ஏற்ற பணிகளை இந்த நிறுவனத்தில் அவர்களால் செய்யக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக, முகாமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என்று ஒவ்வொரு பிரிவிலும் பெண்கள் தங்களது ஆளுமையை வெளிப்படுத்த இந்த நிறுவனத்தில் அவர்களுக்கான வாய்ப்புக்களை நிறுவனம் அள்ளி வழங்கியிருக்கின்றது.
உலகம் முழுவதும் சந்தை வாய்ப்புக்களைப் பெற்று பரந்து விரிந்துள்ள இந்த நிறுவனம் தமிழர் பகுதியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.
இங்கு கடல் உணவுப் பொருட்களை சுத்தப்படுத்தி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் மிகப்பெரிய பணியை எமது பெண்கள் தனித்து நின்று செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் எத்தனை பெருமைக்குரிய விடயம்.
மொத்தம் 2000 தொழிலாளர்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தின் மூலம் இறால், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள் உற்பத்தி மற்றும் தூய்மைப்படுத்தப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மன்னாரில் இருக்கும் நிறுவனத்தில் அனைத்து உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் செயற்பாடுகளையும் அடுத்து தங்கொட்டுவ பகுதிக்கு இறுதி பொதியிடல் பணிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
மிக சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட்டு, மிகவும் சுத்தமாக கையாளப்படுவதன் காரணமாக இந்த நிறுவனத்திற்குரிய செல்வாக்கும் அதிகரித்துள்ளது. வடக்கில் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க ஆரம்பிக்கப்பட்ட அதாவது யுத்தம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது நிறுவனம் என்றும் 2011ஆம் ஆண்டு இது ஆரம்பிக்கப்பட்டதாகவும் அங்கு பணிபுரியும் ஒருவர் வெளிப்படுத்தினார்.
யுத்தம் முடிந்த பின்னரான நாட்களில், சொத்து மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியான பெண்களுக்கு ஒரு திசை காட்டியாக இந்த நிறுவனம் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அங்கு பணிபுரியும் பெண்களுக்கு முதுகெலும்பாக இந்த நிறுவனம் அமைந்துள்ளது என்று பெருமைப் பட அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களின் உடல் நலத்தினை கவனத்தின் கொண்டு பணிகள் வழங்கப்படுவதுடன் அவர்கள் செய்ய வேண்டிய பணியை அவர்களே தெரிவு செய்து கொள்ளட்டும் என்ற வாய்ப்பும் வழங்கப்படுவது நிறுவனத்தின் மீதான நன்மதிப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் தொடர்பில் உணர்வுபூர்வமான ஒரு விடயத்தை பகிர்ந்து கொண்ட தாயார், தனக்கு ஒரு கை மட்டுமே செயல்படும் நிலையில் தனது குடும்பத்தினர், உறவுகள் அனைவரும் தன்னைத் தூற்றியதாகவும், தொழிலற்ற நிலையில் தனக்கு உணவு கொடுக்கக் கூட முகம்சுழித்ததாகவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் குறித்த நிறுவனத்தில் தான் இணைந்து கொண்ட போது தான் செய்ய வேண்டிய வேலையைக் கூட தானே தெரிவு செய்த நிலையில், இன்று நிறுவனம் முழுவதும் தனக்கு நண்பர்களும் உறவுகளும் உள்ளனர் என்று கண்ணீர் ததும்ப குறிப்பிட்டார்.
"நான் சொந்தமாக வீடு கட்டியிருக்கின்றேன்.. கை நிறைய சம்பாதிக்கின்றேன்.. என்னைத் தூற்றியவர்கள் இன்று என்னை தேடி வரும் போது நான் மிகவும் மகிழ்ந்திருக்கின்றேன்" என்று அந்த தாய் கூறும் போது அவரின் உறுதி குறித்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்தியம்புவதாய் அமைகின்றது..