1700 ரூபா சம்பளம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ள நிறுவனங்கள்: மகிந்தானந்த அறிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு பத்து தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் 18வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாவலப்பிட்டி தனியார் விழா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் படி, சம்பளத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு சம்பளம் வழங்கக்கூடிய ஏனைய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) தமது கட்சியின் ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும், நாவலப்பிட்டி பிரதேசத்திலுள்ள தோட்ட மக்களின் பிள்ளைகளின் கல்வித்தரம் மற்றும் தோட்ட மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான பணிகளைச் செய்துள்ளதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தோட்டத் தொழிலாளர்களிடம் வந்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் அரசியல் வாதிகள் தேர்தலின் பின்னர் எந்த ஒரு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டாலும் தற்போது அவர்கள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகவும் நாடாளுமன்ற உறுபப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |