தமிழக மீனவர்கள் கைதால் பதற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம்
"தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளதாகவும் இந்த செயல் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் ஜனவரி 22 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது கடற்றொழில் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24) கடிதம் எழுதியுள்ளார்.
சிறிலங்கா கடற்படையினரால் கைது
அந்தக் கடிதத்தில், கடற்றொழில் படகுகளுடன் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில், ஜனவரி22 அன்று சிறிலங்கா கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது.
இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது.
பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில்
தமிழகத்தைச் சேர்ந்த மீனவ சமூகங்களின் கலாசார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.
அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை
அப்பாவி கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய கடற்றொழிலாளர்களுக்கும், சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைக் காவலில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும்போதே சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |