45 ஆண்டுகளின் பின் மீண்டும் பூமியை கடக்கவுள்ள சிறுகோள் : நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பு
சுமார் 45 ஆண்டுகளின் பின்னர் ஒரு சிறுகோள் ஒன்று இன்று (24) பூமியை கடந்து செல்லவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
2021 BL3 என்ற இந்த சிறுகோளானது இதற்கு முன்னர் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியன்று பூமியை சுமார் 74 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து சென்றதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் குறித்த சிறுகோளானது 6.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்கலங்களின் வேகத்தை விட
இன்றைய நாளின் பின்னர் இதே சிறுகோள் மீண்டும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதியன்று, சுமார் 24 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து செல்லும் எனவும் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
இந்த சிறுகோளானது தற்போது பூமியை நோக்கி அதன் சுற்றுப்பாதையில் மணிக்கு 84,220 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டு இருப்பதாகவும், இது பெரும்பாலான விண்வெளி விண்கலங்களின் வேகத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 45 அடி அகலம் கொண்ட ஒரு சிறுகோள் சுமார் 3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து சென்றதாக நாசா அறிவித்திருந்த நிலையில் இன்றும் ஒரு சிறுகோள் பூமியை கடந்து செல்லவுள்ளதை நேற்று அறிவித்திருந்தது.
பூமிக்கு ஆபத்து இல்லை
பூமியை கடந்து செல்லும் இவ்வாறான சிறுகோள்களின் கூட்டமானது பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்களின் அப்பல்லோ குழுவைச் சேர்ந்தது எனவும் அவை பூமியை விட பெரிய அரை-பெரிய அச்சுகளைக் கொண்டவை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுகோள்களை ஜெர்மன் வானியலாளரான கார்ல் ரெய்ன்முத் 1930 களில் கண்டுபிடித்து அவற்றிற்கு 1862 ஆம் ஆண்டு அப்பல்லோ சிறுகோள் எனப் பெயரிடப்பட்டது.
இன்று பூமியை கடக்கவுள்ள 2021 BL3 என்ற சிறுகோளானது சுமார் 130 அடி அகலம் கொண்டது எனவும் இது ஒரு பெரிய விமானத்தின் அளவை கொண்டிருக்கும் போதிலும் இதனால் பூமிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது எனவும் நாசா உறுதி பட கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |