திருச்சி சிறப்பு முகாமில் பதற்றம்: மரங்களின் மீதேறி இலங்கை தமிழர்கள் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு கடந்த 1-ஆம் திகதி முதல் வழங்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களுக்கான தினசரி கொடுப்பனவுகள் வழங்கப்படாததால், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நேற்று காலை முதல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முகாம் வளாகத்தில் பலத்த காவல்துறைபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வாழ்வாதார உரிமைகளும், உணவுக்கான தொகையும் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அகதிகள், முகாம் வளாகத்திற்குள் உள்ள உயரமான மரங்களின் மீதேறி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மறுப்பு
பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களைக் கீழே இறங்குமாறு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை இறங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் இதே சிறப்பு முகாமில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளியான 50 வயதுடைய கிருஷ்ணகுமார் கந்தசாமி என்பவர், இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்டார்.
இந்தத் தொடர் நாடுகடத்தல் நடவடிக்கைகள் முகாமில் உள்ள பிற ஈழத் தமிழர்களிடையே தங்களின் பாதுகாப்பு குறித்த கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வாழ்வாதாரக் கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது அங்குள்ளவர்களைத் தீவிரப் போராட்டப் பாதைக்குத் தள்ளியுள்ளதாகத் தெரியவருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |