அமெரிக்காவுக்கு சீனா கடும் செய்தி
தேவை ஏற்பட்டால் தாய்வான் மீது இராணுவ பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஜப்பானில் நடந்து வரும் குவாட் அமைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாய்வான் மீது படையெடுத்தால் சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களம் இறங்கும் என நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சீன அதிபரின் பதில் வெளிவந்துள்ளது.
தாய்வான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
தாய்வானை அச்சுறுத்தும் விதமாக அந்நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து வருவதுடன், தென்சீனக் கடல் பகுதியில் சீனா போர்ப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தாய்வான் மீது தாக்குதல் நடத்த தமது இராணுவம் தயாராகவுள்ளது என்று சீன அதிபர் வெளியிட்ட குரல் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.