பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம் திருத்தப்பட வேண்டும்...!
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில், பயங்கரவாதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பொது மக்களின் அடிப்படை மனித உரிமைகளை நசுக்கும் வகையில் இந்த சட்டமூலத்தின் ஊடாக காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்படுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய கோரியுள்ளார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு குறித்த சட்டமூலம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அத்துடன், குறித்த கடிதத்தின் பிரதியை அதிபரும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆணைக்குழு அனுப்பியுள்ளதாக எல்.டி.பி. தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.
திருத்தங்கள்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், தற்போது உச்ச நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசேட தீர்ப்பை நீதிமன்றம் வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மக்களின் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு, மற்றும் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் தெஹிதெனிய வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத சட்டமூலத்தில் பயங்கரவாதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் சுருக்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |