சிங்களத்தின் இனவழிப்பையே தமிழர்களுக்கு ஆண்டாண்டு நினைவுபடுத்துகிறது சுதந்திர தினம்
சிறிலங்காவின் சுதந்திரதினம் சிங்களத்தின் இனவழிப்பையே தமிழர்களுக்கு ஆண்டாண்டு நினைவுபடுத்துகிறது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் 76ஆவது சுதந்திரதினத்தை வடக்கு கிழக்கு மக்கள் கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றமை தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பிரித்தானிய காலனித்துவ ஆதிக்கம்
“சிறிலங்காவின் 76ஆவது சுதந்திரதினத்தை வழமைபோல் தமிழீழ மக்கள் கரிநாளாக அனுட்டிக்கும் இந்நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் இனவழிப்பு சிறிலங்கா அரசுக்கு எதிரான எமது போர்க்குரலை ஓங்கி முரசறைகிறோம்.
இலங்கை காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டபோது காலனித்துவவாதிகளால் பறிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் இறைமை தமிழ் மக்களுக்கே உரித்தானதாகியிருக்க வேண்டும்.
இருந்தும், சிங்கள அரசியல் தலைவர்களும் பிரித்தானிய காலனித்துவவாதிகளும் இணைந்து பின்னிய அரசியல், இராஐதந்நிரப்பொறிக்குள் தமிழ் மக்கள் அவர்களது சம்மதம் இன்றியே வீழ்த்தப்பட்டார்கள்.
இலங்கைத்தீவின் அரசை சிங்கள பௌத்த இனவாத அரசாக வளர்த்தெடுப்பதற்கான அடிப்படைகளை சிங்களத் தலைவர்கள் பிரித்தானிய காலனித்துவவாதிகளின் சம்மதத்துடனேயே உருவாக்கிக் கொண்டார்கள்.
ஈழத் தமிழ் மக்களை இனவழிப்பு
காலனியாதிக்கத்தில் இருந்து இலங்கைத்தீவு விடுபடும் நடைமுறையில் தமிழர் தலைவர்களின் கருத்துக்கள் செவிமடுக்கப்படவில்லை. இதன் விளைவாக, இலங்கைத்தீவின் அரசு சிங்கள பௌத்த அரசாக வளர்ச்சி கண்டு, ஈழத் தமிழ் மக்களை இனவழிப்பு செய்யும் திட்டத்தை தனது முதன்மை நோக்காகக் கொண்டு இயங்கி வருகிறது.
தமிழ் மக்கள் தமது இறைமையை சிங்களத்திடம் என்றும் கையளித்ததுமில்லை. பகிர்ந்து கொண்டதுமில்லை. சிறிலங்கா அரசின் 1972, 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புத் திட்டங்களுக்கும் தமிழ் மக்கள் தமது ஆதரவையோ அல்லது சம்மதத்தையோ என்றுமே வழங்கியதில்லை.
1976 ஆம் ஆண்டு Trial at Bar வழக்கில் மீண்ட இறைமை எனும் சட்ட வரையறையின் அடிப்படையில் தமிழ் மக்களை ஆள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு எந்தவித சட்ட முகாந்திரமும் இல்லை எனத் தமிழ்த் தலைவர்கள் வாதிட்டனர். சிறிலங்கா அரசின் ஆளுகைக்கு உட்பட்ட மக்களாகத் தமிழ் மக்கள் தம்மைக் கருதியதில்லை.
அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் தமது இறைமையை மீளப் பெற்றுக் கொள்ளுதல் எனும் அடிப்படையில் தமக்கான தனியரசை அமைப்பதற்கான உரித்துடையவர்கள்.
திருமலை நடராஜன் சுட்டுக் கொலை
வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழ் மக்கள் அடிமைகளாக நடத்தப்படும் சூழலில் தமிழீழ அரசை அமைப்பற்றகான நியாயங்களை எடுத்தியம்புகிறது.
இலங்கைத்தீவின் சுதந்திரத்துக்குப் பிந்திய தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து தமிழரசுக்கட்சி 1957, பெப்ரவரி 4 ஆம் நாளை கறுப்பு நாளாகப் பிரகடனம் செய்தது.
இத் தினத்தில் இலங்கைத் தேசியக்கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்ற முற்பட்ட திருமலை நடராஜன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றிலிருந்து பெப்ரவரி 4 தமிழ் மக்களுக்கு கரிநாளாகவே இருந்து வருகிறது.
இலங்கைத்தீவின் சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அரசகட்டமைப்புக்களின் விளைவாய் ஜனநாயகம் என்பது தடம் புரண்டு தீவு, சிங்கள பௌத்த இனவாதத்தின் பிடியில் சிக்குண்டு இனநாயகமாக அரச கட்டமைப்பு வடிவெடுத்தது. இந் நிலை உருவாக்கம் பெற்றதற்கு சிறிலங்கா அரசுக்கு முட்டு கொடுத்த, கொடுக்கும் அனைத்து அரசுகளும் பொறுப்பெடுக்க வேண்டும்.
இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் சந்தித்த, சந்திக்கும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் இந்த இனநாயக அரச கட்டமைப்பே வழிவகுத்தது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் சிங்களத்தின் இனநாயகமும், அரச படைகளின் இராணுவ வன்முறைகளுமே காரணமாக அமைந்தன.
இனவழிப்பில் இருந்து விடுபட
இந்த உண்மைகளை நன்கு அறிந்திருந்துமே அனைத்துலக அரசுகள் நியாயத்தின் பக்கம் நிற்காமல் தங்கள் நலன்களின் அடிப்படையிலேயே நடந்து கொண்டன. தமது நலன்களுக்காக அரசுகள் ஆடைகள் ஏதுமின்றி அம்மணமாக அலையக் கூடியவை என்ற கூற்றும் அரசியல் அறிஞர்களால் கூறப்படும் சூழலில் அரசுகளின் இந் நடத்தை ஆச்சரியத்துக்குரியதல்ல.
ஈழத் தமிழ் மக்கள் சிங்கள அரசின் இனவழிப்புக்கு உள்ளாகி வரும் இன்றைய நிலையில் இந்த இனவழிப்பில் இருந்து எவ்வாறு விடுபட முடியும் என்பது குறித்துச் சிந்திப்பதும் செயற்படுவதுமே தமிழ் மக்களின் முதன்மைத் தேவையாக உள்ளது.
கடந்து போகும் சிறிலங்காவின் ஒவ்வொரு சுதந்திர தினமும் ஈழத் தமிழ் மக்களுக்கு சிங்களத்தின் தமிழினவழிப்பையே நினைவுபடுத்திச் செல்லும். ஈழத் தமிழர் தேசம் இனவழிப்பு ஆபத்தின்றி வாழ்வது என்பது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு என அமைக்கப்படும் போதே சாத்தியமாகும்.
இதனால், சிறிலங்காவின் சுதந்திரதினம் என்பதனை கரிநாளாக மட்டுமன்றி, தமிழ் மக்கள் தமக்கான அரசை நிறுவுதற்கான அவசியத்தை வலியுறுத்தும் நாளாகவும் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான செயற்பாடுகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |