இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் : கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
இந்த பேச்சுக்களின் இறுதியில் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை, 4 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றிருந்தது.
இதன் போது, வர்த்தகம், சேவைகள், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தாய்லாந்து வர்த்தகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோடிமா லெம்சவாஸ்டிகுல் (Chotima Iemsawasdikul) தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து பிரதமரின் இலங்கைக்கான பயணம்
இந்த விடயங்கள் உள்ளடங்கிய உடன்படிக்கை தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கான பயணத்துக்கு முன்னர் அந்த நாட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை அனுமதியை தொடர்ந்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்த உடன்படிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |