கிழக்கில் பொங்கல் விழா! செந்தில் தொண்டமானிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் விழாவை பிற்போடுமாறு இராவணசேனை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தைப்பொங்கல் விழாவை ஜனவரி 07 ( மார்கழி 22) இல் நடத்தவிருப்பது வேதனையளிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அதிதியாகக் கலந்துகொள்ளும் நபர்களின் வசதிக்காக தமிழர் அடையாளத்தையும், விழாக்குரிய பெருமையினையும் மாற்றிட திருகோணமலை மாவட்ட சைவத் தமிழ்மக்கள் ஒருபோதும் உடன்படமாட்டார்கள் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கோரிக்கை
இது குறித்து இராவணசேனை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தைப்பொங்கல் விழா என்பது தமிழ் மாதமான தை பிறந்த பின்னரே நடத்தப்படும் ஒன்று. ஆனால் தாங்கள் இவ்விழாவினை ஜனவரி 07 ( மார்கழி 22) இல் நடத்தவிருப்பதாக அறியக்கிடைப்பது பெரும் வேதனையளிக்கின்றது.
தைப்பொங்கல் மற்றும் அது சார்ந்த விழா தைபிறக்கும் முன் நடத்துதல், கொண்டாடுதல் என்பது பண்பாட்டு அழிப்பு. இதை திருகோணமலை சைவத்தமிழர் அமைப்பு எனும் வகையில் தங்களுக்கு எடுத்தியம்பி திகதியை மாற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்பொங்கல் விழா தொடர்பாக கடந்த 02 டிசம்பர் 2023 அன்று திருகோணமலை நகராட்சி மன்றக்கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் எமது அமைப்பு உட்பட பலர் ஜனவரி 07 ஆந் திகதியை நிராகரித்திருந்தோம் என்பதையும் நினைவுபடுத்துகின்றோம்.
குறித்த விழாவானது தைப்பொங்கல் விழா அல்ல "கலாசாரவிழா" என சிலர் பரப்புரை செய்வதையும் காணமுடிகின்றது. அவ்வாறு உருமறைத்துச் செய்யவேண்டிய தேவையும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |